உட்கோட்டை கிராமத்தில் பழமை வாய்ந்த அபிராமி சமேத அபராத ரட்சகர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலய வளாகத்தில் முட்புதர்கள் காடுபோல வளர்ந்திருந்தது. இதனை அழித்து கோயிலை சுத்தம் செய்து பொதுமக்கள் வழிபாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, சிலர் ஆலயத்தில் உழவாரப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, கோயில் வளாகத்தில் இருந்த முட்புதர்கள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யய்ட்டது. மேலும், கோயில் வளாகத்தைச் சுற்றிலும் கொட்டப்பட்டிருந்த குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவை அப்புறப்படுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து கருவறை சுத்தம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
இதுகுறித்து சிவனடியார்கள் கூறும்போது, "திருநாவுக்கரசர் எவ்வாறு சிவனடிகளாக இருந்து உழவாரப் பணிகளை மேற்கொண்டாரோ, அதுபோல தமிழ்நாடு தோறும் உள்ள சிவன் கோயில்களில் மாதத்திற்கு ஒருமுறை குருகுலத்திலிருந்து சென்று உழவாரப் பணி மேற்கொண்டு கோயில்களை தூய்மை செய்வதை பணியாக வைத்துள்ளளோம். இதுபோல, தமிழ்நாடு முழுக்க 30க்கும் மேற்பட்ட கோயில்களில் உழவாரப்பணி மேற்கொண்டுள்ளோம்" எனத் தெரிவித்தனர்.