தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் சாலை விதிகளை பின்பற்றுவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் சாலை பாதுகாப்பு வார விழா அரியலூரில் வாகன பேரணியோடு இன்று தொடங்கியது.
பேரணி, அரியலூர் அண்ணா சிலை அருகே தொடங்கி புதிய பேருந்து நிலையம் சென்றடைந்தது. பேரணியை கொடியசைத்து மாவட்ட ஆட்சியர் ரத்னா தொடங்கிவைத்தார். அரியலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பின்னர் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தை நகரின் வீதிகள் வழியாக ஓட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
அரியலூர் மாவட்ட மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிக் கல்லூரிகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்தப்படும் என்று அரியலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜ் அறிவிப்பை வெளியிட்டார்.
பின்னர் பேருந்து நிலையத்தில் ஓட்டுநர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை வழங்கினர். இந்த பேரணியில் மாவட்ட அரசு அலுவலர்கள், பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ஒவ்வொராண்டும் ஜனவரி மாதம் 20ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை ஒருவாரத்திற்கு சாலை பாதுகாப்பு வாரம் தமிழ்நாடு அரசால் முன்னெடுக்கப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கதாகும்.
இதையும் படிங்க : விவசாயத்திற்கு எதிரான திட்டங்களைச் செயல்படுத்தமாட்டேன் என முதலமைச்சர் உறுதியளிக்கணும் !