அரியலூர் ரயில் நிலையத்தில் குடிநீர் வினியோகம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் ரயில் நிலையத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுதல் குறித்து திருச்சி கோட்ட ரயில்வே பொதுமேலாளர் அஜய் குமார் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது திருச்சி ரயில்வே கோட்ட அலுவலர்கள், அரியலூர் ரயில் நிலைய அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அஜய் குமார், 'ரயில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் தூய்மையான ரயில் நிலையம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஆய்வுப்பணி நடைபெற்றது. திருச்சி கோட்டத்திற்குட்பட்ட நாகப்பட்டினம் முதல் திருத்துறைப்பூண்டி வரையிலும், காரைக்கால் முதல் பேரளம் வரையிலும் உள்ள ரயில் தடங்களில் மின்மயமாக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிகள் முடிவடைந்து ரயில்கள் இயக்கப்படும் போது பயண நேரம் குறையும். முக்கியமாக அரியலூர் ரயில் வழித்தடத்தில் புதிய ரயில் இயக்குவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
அரியலூர் அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியில் ரயில்வே துறையின் பணி முடிவடைந்துள்ளது. மாநில அரசின் பணிகள் முடிவடையாததால் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. பணிகள் முடிவடைந்தவுடன் மேம்பாலம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: நடிகர் சங்க தனி அலுவலர் விவகாரம்: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!