தமிழ்நாட்டில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் அரியலூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் தலைமை வகித்தார். பின்னர் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய கொறடா ராஜேந்திரன், 'அதிமுக ஆளுங்கட்சியாக உள்ளதால் உள்ளாட்சித் தேர்தலில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியும். ஆனால், திமுக ஏற்கெனவே பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து, நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றனர். எனவே மக்கள் திமுக கூறக்கூடிய வாக்குறுதிகளை நம்ப மாட்டார்கள்’ என்றார்.
மேலும், 'நம்மிடம் மிகவும் பலம் வாய்ந்த அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு, நாம் நூறு விழுக்காடு வெற்றி பெறவேண்டும்’ எனக் கூறினார்.
தொடர்ந்து, 'உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 15, 16ஆம் தேதிகளில் தலைமைக் கழகம் அறிவித்ததுபோல், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தர வேண்டும். அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்காக பாடுபட வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடந்தால் அதிமுக கூட்டணி மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் - மாணிக்கம் தாகூர்