அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தில் நைனார் ஏரி உள்ளது. இந்த ஏரியின் கரையில் அமைந்துள்ள மயானத்தை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் அந்த ஏரி நீரினால் நிரம்பும் போது, சடலத்தை எடுத்துச்செல்ல அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், நேற்று அப்பகுதியில் இறந்த மூதாட்டி ஒருவரின் சடலத்தை அப்பகுதி மக்கள் ஆபத்தான முறையில் ஏரியில் கழுத்தளவு நீரில் சுமந்து சென்றனர். இதுகுறித்து பலமுறை அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். இருந்தபோதிலும், அந்த புகாரின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தெரிகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இதே நிலை நீடித்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இதனைப் போர்க்கால அடிப்படையில் ஆராய்ந்து, ஏரியின் கரையைப் பலப்படுத்தி, மயானத்திற்குச் செல்ல சாலை வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: செல்ஃபோன் கடையில் ரூ. 1லட்சம் திருட்டு!