அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள குவாகம் காலனி தெருவைச் சேர்ந்தவர் லோகிதாஸ். இவரது மனைவி சிவகாமி (80). இவர்களுக்கு நான்கு மகன்கள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். மூதாட்டி சிவகாமி தனியாக செந்துறை காவல் நிலையம் அருகே உள்ள குடிசை வீட்டில் வசித்துவந்தார்.
இந்நிலையில், அவர் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி மர்மமான முறையில் வீட்டில் இறந்துகிடந்தார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். அதனடிப்படையில் குவாகம் காவல் துறையினர் மூதாட்டி உயிரிழப்பு குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மூதாட்டி அணிந்திருந்த அரை சவரன் நகை, ரூ.500 பணத்திற்காக 14 வயது சிறுவன் ஒருவன் அவரின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. பின்னர் சிறுவனை காவல் துறையினர் கைது செய்து அரை சவரன் தங்க நகை, 500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
அரியலூரில் அரை பவுன் நகைக்காக மூதாட்டியை சிறுவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 6 வயது மகளை கழுத்தறுத்துக் கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி செய்த பெண்!