அரியலூர்: காவிரி டெல்டாவின் ஒரு பகுதியாக கருதப்படும் அரியலூர் மாவட்டத்தில், குறுங்குடி(1), காட்டகரம்(2), குண்டவெளி(3) மற்றும் முத்துசேர்வமடம்(4) உள்ளிட்ட இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைக்க உள்ளதாக தகவல் கூறப்பட்டு உள்ளது. மொத்தம் 10 இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி அனுமதி கோரிய நிலையில், அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி, விவசாயிகளின் அனுமதியுடன் கிணறு அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து, எண்ணெய் கிணறு அமைக்கும் பகுதிகளில் இருந்து காவிரி ஆற்றின் தூரம் குறித்த விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்று தனியார் நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் முன்னதாக ஆய்வு கிணறுகள் இருந்து வரும் நிலையில், தற்போது உற்பத்தி கிணறுகள் அமைக்க கடந்த ஜூன் 15ஆம் தேதி ஓஎன்ஜிசி நிறுவனம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பி விண்ணப்பித்து இருந்தது.
இதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பல்வேறு அறிவுறுத்தல்களுடன் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு 9 பக்கங்கள் கொண்ட பதில் கடிதம் அளித்துள்ளது. மத்திய அமைச்சகத்தின் அந்தக் கடிதத்தில், "கிணறு அமைக்க அப்பகுதி விவசாயிகளிடம் கருத்து கேட்பு நடத்தப்பட வேண்டும், நிலவளம், நீர்வளம் பாதிக்காத வகையில் எண்ணெய்க் கிணறுகள் அமைக்க வேண்டும், கிணறுகள் அமையவிருக்கும் இடம் காவிரி ஆற்றுப்பாசன பகுதிகளா?, மேலும் கிணறுகள் அமையவிருக்கும் இடங்கள் புள்ளி விவரங்களுடன் கூடிய தெளிவான விளக்கங்கள் அளிக்க வேண்டும்" என பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக கிணறு அமையவிருக்கும் பகுதிகளில் இருக்கும் விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டத்திற்காக மாவட்ட ஆட்சியரிடம் தனியார் நிறுவனம் அனுமதி கேரிய நிலையில், உற்பத்தி கிணறுகள் அமையவிருக்கும் இடத்தின் புள்ளி விவரங்கள் மற்றும் ஆய்வு எண்ணெய் கிணறுகள் உள்ள இடங்கள் குறித்த விவரங்கள் அனைத்தையும் சமர்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் அடிப்படையில் தற்போது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் போதிய விவரங்களை சமர்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. பொதுவாக ஆய்வு கிணறுகள் அமையவிருக்கும் இடங்களில் நிலத்தில் 100 மீட்டர் அளவிற்கு சோதனை நடத்தப்படும். ஒரு பகுதியில் ஆய்வு எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்கு State Environment Inaugural Impact Assessment (SCIA)-யின் அனுமதி பெற்றிருந்தாலே போதுமானது.
ஆனால், உற்பத்தி எண்ணெய் கிணறுகள் அமைக்க மத்திய அமைச்சகத்தின் அனுமதி கட்டாயமாக்கப்படுகிறது. முன்னதாக அரியலூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் அனைத்து கிணறுகளும் விவசாயம் மேற்கொள்ளப்படாத வெற்று இடங்கள் என ஓஎன்ஜிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள 10 இடங்களும் காவிரி ஆற்றுப்பாசனத்தின் கீழ் வராது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட இடங்கள் அனைத்தும் காவிரி ஆற்றுக்கு மிக அருகாமையில் உள்ளது என்றாலும் இந்த இடங்கள் அனைத்தும் டெல்டா பகுதிகளுக்கு உட்பட்டதும் கிடையாது என்றும் நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் வேளாண் கூட்டுத்தொடரில் பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களுக்கும் இதனால் பாதிப்புகள் நிகழாது என்று கூறப்படுகிறது. நில வளம், நீர் வளம் அழியாத நிலையில் கிணறுகள் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள நிலங்கள் குறித்து தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: 5 விநாடியில் ககன்யான் டிவி-டி1 சோதனை விண்கலம் நிறுத்தம் - இஸ்ரோ தலைவர் முக்கிய அறிவிப்பு!