அரியலூர்: அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம் விளந்தை ஊராட்சியில் உள்ள அரசினர் மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் 234/77 ஆய்வுப் பயணத்திட்டத்தின் கீழ், 123வது சட்டமன்றத் தொகுதியாக ஜெயங்கொண்டம் தொகுதிக்குட்பட்ட விளந்தை ஊராட்சியில் ஒரே பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
விரிவான ஆய்வை மேற்கொண்ட அவர், பள்ளி உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மைதானம் மேம்பாட்டுப் பணிகள், பள்ளி வளாக மேம்பாட்டு உள்ளிட்ட பணிகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
அதேபோல், அப்பள்ளிகளில் உள்ள பயன்பாட்டில் இல்லாத கட்டடங்களின் நிலையைக் கவனத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்கவும், கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ளும் போது கவனமாக மேற்கொள்ளவும் மாவட்டக் கல்வி அலுவலரிடம் அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியருடன் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது "பொதுத்தேர்விற்கு நல்ல முறையில் படித்து தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேரவேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும்.
பாடங்களில் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் ஆசிரியர்களிடம் தயங்காமல் கேட்டு அதனைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்த ஆண்டு பொதுத் தேர்வை எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கு எனது வாழ்த்துகள்" என தெரிவித்தார்.
மேலும், இந்த ஆய்வின் போது வளந்தை அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் தமிழ்முருகன், விளந்தை அரசினர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அபிலா, பள்ளிக்கல்வித் துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: 15 டிஎன்பிஎஸ்சி தேர்வுகளின் முடிவுகள் வெளியிடும் தேதி அறிவிப்பு!