உள்ளாட்சித் தேர்தல்: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை - உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு ஏண்ணிக்கை
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக அக்டோபர் 6, 9ஆம் தேதிகளில் நடைபெற்றது. ஒன்பது மாவட்டக் குழுத் தலைவர்கள், 74 ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், 2,901 ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி அளவில் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை முடிவினை காலை 8 மணிக்கு மேல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதள முகவரி https//tnsec.tn.nic.in- இல் உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை
முதல்கட்ட தேர்தலில் 77.43 விழுக்காடும், இரண்டாம்கட்ட தேர்தலில் 78.47 விழுக்காடு வாக்குகளும் பதிவாகி உள்ளன. மேலும் 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 70.51 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளன. இத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட 41 ஆயிரத்து 500 வாக்குப்பெட்டிகள், 74 எண்ணிக்கை மையங்களில், பலத்த காவல் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை நடத்துவது குறித்து, தமிழ்நாடு தேர்தல் ஆணையர் கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வெ. பழனிகுமார், தலைமையில் அனைத்து மாவட்டத் தேர்தல் பார்வையாளர்கள், மாவட்டத் தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் காணொலி காட்சி ஆய்வுக்கூட்டம் நேற்று (அக்டோபர் 11) நடைபெற்றது.
இதையடுத்து தேர்தலில் வெற்றிபெற்று பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு முதல் கூட்டம் அக்டோபர் 20ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: அரசு மருத்துவர்கள் 17 கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அக்.20 போராட்டம்!