உள்துறை அமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான அமித் ஷா இன்று தனது 57ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி முக்கிய தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், “அமித்ஷா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நான் பல ஆண்டுகளாக சகோதரர் அமித் ஷா உடன் பணியாற்றியுள்ளேன். கட்சியையும், அரசாங்கத்தையும் வலுப்படுத்த அவர் மேற்கொண்ட சிறந்த பங்களிப்புகளைக் கண்டுள்ளேன். அவர் அதே ஆர்வத்துடன் தேசத்திற்கு சேவை செய்யட்டும். அவரது நல்ல ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக நான் பிரார்த்திக்கிறேன்” என வாழ்த்தியுள்ளார்.
இதையடுத்து தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் ட்விட்டரில், “வளமான, வலிமையான பாரதத்தை உருவாக்க உறுதி கொண்டு பிரதமரோடு தோளோடு தோள் நின்று தீராத காஷ்மீர் எல்லை பிரச்சினை முதல் கன்னியாகுமரி வரை அகண்ட பாரதத்தை அரசியல் சாணக்கியத்துடன் முன்னேற்றப்பாதையில் முழு மூச்சுடன் ஈடுபடும் எங்களின் வழிகாட்டி பாரத தாயின் நம்பிக்கை நட்சத்திரம், உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். பூரண உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் கிரிக்கெட் வீரரும், மக்களவை உறுப்பினருமான கௌதம் கம்பீர் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளை, ட்விட்டர் பக்கத்தில் அமித் ஷாவுக்கு தெரிவித்துள்ளனர்.