அரியலூர்: அரியலூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறை துணை ஆய்வாளர் சங்கர் மற்றும் தலைமைக் காவலர் சந்திரமோகன் இருவரும் இருசக்கர வாகனத்தில் கீழப்பாவூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, வாரணவாசி என்ற இடத்தில் சாலையோரமாகக் கருப்பு நிற பை ஒன்று கிடந்ததைப் பார்த்தனர். அந்த பையை எடுத்துப் பார்த்தபோது, அதில் துணிமணிகளுடன் நகை டப்பா ஒன்றும் இருந்தது. அதனை பிரித்துப் பார்த்தபோது அதில் 8 சவரன் தங்கச் சங்கிலி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த பையை எடுத்துக் கொண்டு அதே வழியில் மெதுவாக சென்று கொண்டே இருந்தனர். அப்போது அந்த சாலையில் கார் ஒன்று நின்றிருந்தது, அதன் அருகில் பெண்மணி ஒருவர் சாலையோரமாக எதையோ தேடிக் கொண்டிருந்தார். இதைக் கண்ட போக்குவரத்து போலீசார் அவரது அருகில் சென்று விசாரித்தனர். அப்போது அந்தப் பெண் பெரம்பலூரில் இருந்து தஞ்சாவூர் நோக்கி செல்வதாகவும், தனது காரில் இருந்த பை சாலையில் தவறி விழுந்துவிட்டதாகவும், அதில் பணம், நகை இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதைக் கேட்ட போலீசார் தாங்கள் எடுத்து வந்த பையை அவரிடம் காட்டினர். அதைப் பார்த்ததும் ஆனந்த கண்ணீர் விட்ட அந்தப் பெண், அது தன்னுடையது என்று தெரிவித்தார். பின்னர் பையில் என்னென்ன பொருட்கள் இருந்தது என்று சரியாக விவரம் சொல்ல வேண்டும் என்று போலீசார் கேட்டனர்.
பையில் இருந்த நகை பெட்டியிலிருந்த நகை, அதன் மாடல் என அனைத்து விவரங்களையும் அந்த பெண் சரியாகக் கூறினார். இதை அடுத்து போலீசார் பையை அந்த பெண்ணிடமே ஒப்படைத்தனர். பையை தவறவிட்ட அந்த பெண்ணும் ஒரு போலீஸ்காரர் அவரது கணவரும் ஒரு போலீஸ்காரர் என்றும், அப்பெண்ணின் பெயர் உமர் ஷர்மிதா என்றும் தெரியவந்தது.
உமர் ஷர்மிதா பெரம்பலூர் மாவட்ட காவல்துறையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். அவரது கணவர் பஷீர் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இந்த விவரங்களை அறிந்த அரியலூர் மாவட்ட போக்குவரத்து போலீசார் கவனமாக இருக்கும்படி பெண் காவலருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?