அரியலூரில் நடைபெற்ற காமராஜர் பிறந்தநாள் விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி கலந்துகொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன் நிறுத்தப்பட்டது, விவசாயத்தை அழித்துவிடும். மாநில அரசு மத்திய அரசின் ஏவல் ஆளாக செயல்படுகிறது.
கூட்டுறவு வங்கிகளை மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் என எப்போது மத்திய அரசு கூறியதோ, அப்போதே மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். இவர்கள் எதிர்ப்பு தெரிவிக்காததின் விளைவு இன்று கோடிக்கணக்கான விவசாயிகள் சிரமப்படுகிறார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகள் நகைக்கடன்கள் பெற ஏற்பாடு செய்ய வேண்டும். கரோனா தற்போது சென்னையை விட பிற மாவட்டங்களில் வேகமாகப் பரவிவருவது வருத்தத்தை அளிக்கிறது. அரசின் திறமையின்மை, செயலின்மை, திட்டமிடாததுதான் தமிழ்நாட்டில் கரோனா அதிகரிப்புக்கு காரணம்.
கேரளாவில் தொற்று பாதிப்பு குறைந்ததற்கான காரணம் என்ன என்பதையும், தமிழ்நாட்டில் நாம் செய்யத் தவறியது என்ன என்பதையும் கண்டுபிடித்து சரிசெய்ய வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: முதியோர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து - முதலமைச்சர் அனுமதி