அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சுந்தரேசபுரம் கிராமத்தில் 1952ஆம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. அதன் பின்பு 1964ஆம் ஆண்டு, எட்டாம் வகுப்பு வரை தரம் உயர்த்தப்பட்டு அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியானது. இப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வந்தனர், இந்த பள்ளி மூன்று ஆசிரியிர்களை கொண்டு செயல்பட்டு வந்தது.
அப்பள்ளி சரிவர பராமரிக்காத காரணத்தால் கட்டடத்தில் உள்ள ஓடுகள், கட்டடம் உள்ளிட்ட அனைத்தும் சேதமாகி உடைந்து விழுந்தது. இதனால், அப்பள்ளியை விட்டு சில மாணவர்கள் ஐந்து கி.மீ தொலைவில் உள்ள சுத்தமல்லியில் சேர்க்கப்பட்டனர்.
இதனையடுத்து அரசு உதவி பெறும் பள்ளியின் நிர்வாகியான தர்மலிங்கம் தன்னால் பள்ளியை சரியாக பராமகரிக்க இயலாது என்று 2018ஆம் ஆண்டு மாவட்ட கல்விதுறை அலுவலரிடம் அப்பள்ளியை ஒப்படைத்தார். அதன் பின்பு, அப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையும் குறைய தொடங்கியது. அரசே பள்ளியை மூடும் நிலைக்கு வந்துவிட்டது, அதனை அறிந்த கிராம மக்கள் பள்ளியை மூடக்கூடாது என்று போராட்டம் நடத்தினர்.
இது குறித்து மாவட்ட கல்வித்துறை அலுவலரிடம் கிராம மக்கள், குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுககாக்க வேண்டும், குழந்தைகளுக்கு அரசு சார்பில் பள்ளிக்கூடம் கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஒரு ஆண்டு காலம் ஆகியும் அலுவலர்கள் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதனால் சேதமடைந்த பள்ளியில் படித்த மாணவர்கள் தற்போது கிராமத்தில் உள்ள பெருமாள் கோயிலில் கல்வி கற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு உடனடியாக சுந்தரேசபுரம் கிராமத்திற்கு பள்ளிக்கூடம் கட்டித்தர வேண்டும் என்று கிராமமக்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கோரிக்கை வைத்துள்ளனர்.