தற்போது உலகமெங்கும் பரவி வரும் கரோனா வைரஸின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில், ஊரடங்கின் போது நேரடியாகக் களத்தில் நின்று பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு பல தரப்பிலிருந்தும் மரியாதையும், நிவாரண உதவியும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், இன்று அரியலூர் நகராட்சியில் பணிபுரியும் 250க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு, சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருமான திருமாவளவன் அத்திவாசிய பொருட்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, “தற்போதைய சூழ்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தக்கூடாது என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு. மாணவர்கள் மன உளைச்சலில் உள்ளனர். எனவே, இதில் அமைச்சர் உடனடியாக தேர்வு ரத்து என்ற முடிவு எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
அதுபோல குடிபெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவித்தொகையாக 10,000 ரூபாய் வழங்க வேண்டும். மேலும் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுவதால் சென்னையை முழுவதுமாக தனிமைப்படுத்தி அதிக பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்” என கூறினார்.
இதையும் படிங்க: 'எம்.ஜி.ஆர் - கலைஞரை வசைபாடும் கட்சியில் ஒருபோதும் இணைய மாட்டேன்!'