அரியலூர் அருகே கொல்லாபுரம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 'விண்வெளியில் இந்தியா' என்ற தலைப்பில் இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
இதன்பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ”ககன்யான் விண்கலம் மூலம் நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சி நடைபெற்றுவருகிறது. மூன்று கட்டமாக நடைபெறும் இந்த முயற்சியில் முதல்கட்டமாக நிலவில் விண்கலத்தை மெதுவாக இறக்குவது, இரண்டாம் கட்டமாக நிலவில் இறக்கிய விண்கலத்தை மீண்டும் பூமிக்கு வெற்றிக்கரமாகக் கொண்டுவரும் முயற்சி மேற்கொள்ளப்படும். அதன் பின்னரே மனிதனை நிலவுக்கு அனுப்பும் பணி நடைபெறும்.
இந்தியா விண்வெளித் துறையில் தன்னிறைவு பெற்றுள்ளது. குறிப்பாக கனிமங்கள் கண்டறிதல், தொலைத்தொடர்புத் துறை, பருவநிலை மாற்றம் ஆகியவற்றை ஆராய்வதற்கான செயற்கைக்கோள் அனுப்பப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாகவே நிலவு குறித்து ஆராய்வதற்காக செயற்கைக்கோள்கள் செலுத்தும் பணி நடைபெற்றுவருகிறது.
செயற்கைக்கோள் ஏவுதளம் தமிழ்நாட்டில் உள்ள குலசேகரபட்டினத்தில் அமையும் பட்சத்தில், செயற்கைக்கோள் ஏவுவதற்கான செலவுகள் பெருமளவில் குறையும். ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகரபட்டினம் பூமத்தியரேகைக்கு அருகில் இருப்பதால், இரண்டு டன்னுக்கு மேற்பட்ட செயற்கைக்கோளையும் ஏவ முடியும். இதனால் எரிபொருள் தேவை குறையும். அனைத்து பருவகாலங்களிலும் செயற்கைக்கோளை ஏவுவதற்கான பருவநிலை குலசேகரபட்டினத்தில் உள்ளதால் ஸ்ரீஹரிகோட்டாவை விட சிறந்த செயற்கைக்கோள் ஏவுதளமாக குலசேகரபட்டினம் அமையும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தின் முன்மாதிரி திட்டம் ககன்யான்