அரியலூர் நகரின் பிரதான கடைவீதியான மாங்காய் பிள்ளையார் கோயில் தெருவில் பூக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தவர் முருகன். இவருக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் காய்ச்சல் இருந்ததால் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, கரோனா பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று காலை அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். நேற்று மாலை வெளியான அவரது கரோனா பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து, அவர் வியாபாரம் செய்த கடைப்பகுதியைச் சுற்றி அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளப் பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டது.
இப்பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் வணிகம் செய்தவர்கள், கடையின் உரிமையாளர்கள் பேருந்து நிலையம் அருகே இன்று நடைபெறும் கரோனா பரிசோதனைக்கு கட்டாயம் வரவேண்டும் எனறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 492ஆக உள்ள நிலையில், கரோனாவுக்கு முதலாவதாக பூக்கடை வியாபாரி உயிரிழந்தது அரியலூர் மாவட்ட மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: மாணவியிடம் ஆபாசமாகப் பேசிய சென்னை மாநகராட்சி அலுவலர் - வழக்குப்பதிவு செய்த போலீசார்!