அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆனந்தவாடி கிராமத்தில் உள்ள அரசு சிமெண்ட் ஆலைக்காக விவசாயிகளிடமிருந்து 270 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என உறுதியும் அளிக்கப்பட்டது. 1983ஆம் ஆண்டு இந்த ஆலை கட்டப்பட்ட நிலையில், தற்போது வரை ஆனந்தவாடி கிராம மக்களுக்கு வேலை வழங்கவில்லை.
இதற்காகப் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. கடந்த ஜூன் மாதம் அரசு பேச்சுவார்த்தை நடத்தி அதில் தற்போது நிரந்தர வேலைக்கு பணியிடம் இல்லை எனக் கூறி 57 விவசாயி குடும்பத்தினருக்கும் ஒப்பந்த வேலை வழங்கப்பட்டது.
ஆனால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 40 நிரந்தர பணியிடங்கள் நிரப்பப்பட்டதாகத் தெரிவிக்கும் விவசாயிகள், மேலும் 130 நிரந்தரப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாகவும் கூறுகின்றனர்.
நிலம் கொடுத்த 57 விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அந்த வேலையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலை முற்றுகையிட்டனர்.
பின்னர் விவசாயிகளைப் பேச்சுவார்த்தைக்காக அலுவலர்கள் அழைத்துச் சென்றனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் ரத்னாவிடம் மனு அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க:கரும்புக்கு நிலுவைத் தொகையை வழங்காவிட்டால் சர்க்கரை ஆலையை முற்றுகையிடுவோம்!