ஆண்டிமடம் அடுத்த கருக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (70). இவரது தம்பி சிங்காரவேல் (60). இவர்களது நிலத்தை இருவரும் தனித்தனியாக விவசாயம் செய்து வந்தனர். நிலம் சம்பந்தமாக இருவருக்கும் நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று,(செப்.10) ராஜமாணிக்கம் அவரது மனைவி மலர்விழி ஆகியோர் தங்களது நிலத்தில் விவசாய வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த சிங்காரவேல் மற்றும் அவரது மகன்கள் பழனிவேல்(30), முருகவேல்(25) ஆகிய மூவரும் ராஜமாணிக்கத்தையும் அவரது மனைவி மலர்விழியையும் திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். தகவலறிந்து ராஜமாணிக்கத்தின் மகன் தியாகராஜன்(40), வயலுக்குச் சென்று கொண்டிருந்தபோது, சிங்காரவேல் உள்ளிட்ட 3 பேரும் தியாகராஜனை இடையில் வழிமறித்து தாக்கியுள்ளனர்.
இதில் ஏற்பட்ட தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த முருகவேல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தியாகராஜனை நெஞ்சில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தியாகராஜன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் உயிரிழந்தார்.
தகவலறிந்த ஆண்டிமடம் காவல் துறையினர் இன்ஸ்பெக்டர் முஹம்மது இத்ரீஸ் தலைமையில் விரைந்து சென்று தியாகராஜன் உடலை கைப்பற்றி உடல்கூராய்வுக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, கத்தியால் குத்திய முருகவேல் மற்றும் அவரது தந்தை சிங்காரவேல் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள பழனிவேலைத் தேடி வருகின்றனர். இறந்து போன தியாகராஜனுக்கு பூங்கொடி என்ற மனைவியும் கோகுல், பெண்ணரசி என 2 குழந்தைகளும் உள்ளனர். இதனால் கருக்கை கிராமம் முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.