அரியலூர் மாவட்டம், எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் விக்னேஷ் (19). இவர் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த நிலையில், நீட் தேர்வு அச்சம் காரணமாக நேற்று (செப்.9) கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். கிணற்றிலிருந்து மாணவனின் உடலை மீட்ட காவல் துறையினர் உடற்கூராய்வுக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
இருப்பினும், மாணவனை இழந்த பெற்றோர் உடற்கூராய்வு செய்யவிடாமல், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டதால், உடற்கூறாய்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
மேலும் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து, நீட் தேர்வால் மன உளைச்சலுக்கு ஆளாகி உயிரிழந்த விக்னேஷின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பொது மக்கள் சார்பில் மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று (செப். 10) மாலை 3 மணிக்கு இறுதி ஊர்வலம் இருந்த நிலையில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்த அங்கு வந்தார். அப்போது திமுகவினருக்கும், பாமகவினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. மேலும், உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பாமகவினர் முழக்கங்களை எழுப்பினர்.
அதனைக் கண்டுகொள்ளாத திமுகவினர் அவர்களை தள்ளி உள்ளே செல்ல முயன்றனர். ஆனால், தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்த பாமகவினர் உதயநிதி ஒரு புறம் இருக்க; மறுபுறம் உடலை அவசர அவசரமாக தூக்கிச் சென்றனர். இதனை கண்டு சிறிதும் அசராமல் இருந்த உதயநிதி ஸ்டாலின் மாணவனின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூற உள்ளே சென்று கண்கள் கலங்க ஆறுதல் கூறினார். பின்னர் திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியை பணமாக வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், "டாஸ்மாக்கிற்காக உச்ச நீதிமன்றம் வரை சென்ற அதிமுக அரசு நீட் தேர்விற்காக ஏன் செல்ல வில்லை'' எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் நீட் தேர்வுக்காக திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும், உயிரிழந்த மாணவர் குடும்பத்திற்கு அரசு அறிவித்த நிதி போதுமானது அல்ல எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க...: நீட் தேர்வால் மாணவன் தற்கொலை - உறவினர்கள் போராட்டம்!