கோவிட்-19 பெருந்தொற்றின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அனைத்து மாநிலத்திலும் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்றும், அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வெளியில் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரியலூர் மாவட்ட ரயில் நிலையம் அருகே வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் கிடைக்காமல் அவதிப்பட்டுவருவதாகத் தகவல் வந்துள்ளது. இதையடுத்து, அரியலூர் கோட்டாட்சியர் பாலாஜி, வட்டாட்சியர் சந்திரசேகரன் ஆகியோர் நேரில் சென்று ரயில் நிலையம் அருகே விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிலர் பொம்மைகள், பாத்திரங்கள் விற்பனை செய்வதற்காகத் தமிழ்நாட்டிற்கு வந்ததும், ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு காரணமாக உணவு, இருப்பிடம் இல்லாமல் அவதிப்பட்டதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவர்களை அழைத்து வந்த கோட்டாட்சியர், மாவட்ட நிர்வாகத்திற்குச் சொந்தமான இடத்தில் தங்கவைத்தும் அவர்களுக்குத் தேவையான உணவுப் பொட்டலங்களை வழங்கியும் உதவி செய்துள்ளனர்.
மேலும் அவர்களிடம் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என்றும், தேவையில்லாமல் வெளியே சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா பரவலால் தள்ளாடும் வேளாண் துறை - உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்வது எப்படி?