அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கரையான்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் ஏலாக்குறிச்சியில் வாட்டர் சர்வீஸ் கடை வைத்துள்ளார்.
இந்த நிலையில், சரவணன் தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டுவதற்காக கடந்த இரண்டு தினங்களாக ஆள்களை வைத்து அஸ்திவாரம் தோண்டி வருகிறார்.
இந்தநிலையில், இன்று (ஜூன் 21) நான்கடி பள்ளம் தோண்டியபோது கற்சிலை ஒன்று தென்பட்டது. அதனை மேலே எடுக்க முயற்சி செய்தனர். ஆனால் அது முடியவில்லை. பின்னர் இது குறித்து அரியலூர் கோட்டாட்சியர் ஏழுமலைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து அங்கு வந்த கோட்டாட்சியர் அதனை பார்வையிட்டார்.
பின்னர், ஜேசிபி உதவியுடன் அந்தச் சிலை எடுக்கப்பட்டது. அப்போது தான் அது பெருமாள் சிலை எனத் தெரிந்தது. இதைப்பார்த்த அங்கு கூடியிருந்த மக்கள் பெருமாள் சிலையை சுத்தம் செய்து தீபாதாரனை காட்டி வழிபட்டனர். இந்தச் சிலை சுமார் 8 அடி உயரம் கொண்டது.
அதன்பின் கோட்டாட்சியரிடம் சிலை ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சிலையானது திருச்சியிலுள்ள அருங்காட்சியகத்திற்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது. அங்கு அந்தச் சிலையை தொல்பொருள் துறையினர், ஆராய்ச்சிக்கு உட்படுத்திய பின்னர் தான் எந்தக் காலத்துத் சிலை எனத் தெரிய வரும் என்றனர்.
இதையும் படிங்க: தரங்கம்பாடி அருகே சனி பகவான் கற்சிலை கண்டெடுப்பு!