அரியலூர்: இந்தியாவில் 4 கோடியே 99 லட்சம் ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. அதில் தமிழ்நாட்டில் 35 ஆயிரத்து 323 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகள் வாயிலாக பொது விநியோகத் திட்டத்தின்கீழ், அரிசி, கோதுமை, சீனி, பருப்பு, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்கள் குறைந்த விலைக்கு வழங்கப்படுகின்றன.
தமிழ்நாடு போன்ற சில மாநிலங்களில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. மற்ற பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 2 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் இலவச மற்றும் நியாய விலைப்பொருள்களை பெற்று பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் ரேஷன் கடையின் செயல்பாடுகளை பரவலாக்கும் நோக்கத்திலும் ’ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, ஒரே ரேஷன் திட்டம்’ என்ற திட்டத்தை பரவலாக்கும் வகையிலும் மத்திய அரசு தனியார் ரேஷன் கடைகளை திறக்க முன்வந்துள்ளது. ஒரு மாவட்டத்திற்கு 75 என்ற அடிப்படையில் தனியார் ரேஷன் கடைகள் திறக்கப்பட உள்ளன.
இது குறித்து மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, ''ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை பரவலாக்கம் செய்யும் வகையில் ரேஷன் விநியோகத் திட்டத்தில் தனியார் பங்களிப்புக்கு வாய்ப்பளிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து டெல்லி ஐஐடி மற்றும் world food program ஆகியோர் இணைந்து விரிவான ஆய்வுகளை நாடு எங்கிலும் மேற்கொண்டனர்.
இதன் அடிப்படையில் ரேஷன் கடை திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் fair price shop என்ற பெயரில் டீலர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்தியாவில் உள்ள மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்கள் எல்லையில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 75 fair price shop கடைகளை திறக்க வேண்டும்.
இந்த டீலர் கடைகளில் அனைத்து வகையான மளிகைப்பொருட்கள் பொதுமக்கள் அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்தும் அனைத்து விதமான உப பொருள்கள் விற்பனை செய்யப்படுதல் வேண்டும். ஆனால், வெளிச்சந்தை விலைக்கு விற்பனை செய்யப்பட மாட்டாது.
அரசின் நியாய விலைக்கடை விலையில் மட்டுமே பொருட்கள் விற்கப்படும். இந்த தனியார் ரேஷன் கடைக்கும், பொது விநியோகத் திட்ட ரேஷன் கடைக்கும் சம்பந்தம் இல்லை. பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் எந்தவிதமான இலவசப் பொருளும் இந்த தனியார் ரேஷன் கடையில் வழங்கப்பட மாட்டாது. அதே நேரம் தனியார் ரேஷன் கடையில் பொருள் வாங்க சென்றாலும் ரேஷன் அட்டை எடுத்துச்சென்று தான் பொருளை வாங்க முடியும்.
மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தங்களது மாவட்டங்களில் 75 கடைகள் திறக்கத் தேவையான இட வசதிகளை செய்து தர வேண்டும். தனியார் டீலர் என்ற அடிப்படையில் அமைக்கப்படும் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் காத்திருப்பதற்கான அறைகள், சிசிடிவி கேமரா வசதிகள், டாய்லெட் வசதி, குடிநீர் வசதி, பாதுகாப்பு அம்சங்கள் இருத்தல் வேண்டும்.
ரேஷன் திட்டத்தை பெரும் முன்னேற்ற திட்டமாகக் கொண்டு செல்ல பொதுமக்களின் பங்களிப்பும் இருத்தல் வேண்டும் என்ற அடிப்படையில் மட்டுமே இந்த டீலர்கள் அடங்கிய தனியார் ரேஷன் கடை திட்டம் முன்னோடி திட்டமாக கொண்டு வரப்படுகிறது. இந்த தனியார் ரேஷன் கடை உரிமையாளர்கள் ‘fair price shop dealer’ என்ற பெயரில் அழைக்கப்படுவார்கள். இந்தத் தொழில் மூலம் அவர்கள் மாதம் ரூபாய் 50,000 வரை பொருளீட்ட முடியும்'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "திருப்பதியில் ஓலை பெட்டியில் லட்டு வழங்க திட்டம்" - இதுக்கு இதான் காரணமா?