அரியலூர்: தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களிலிருந்து பேருந்து மூலம் சென்னை வரும் அனைத்து பயணிகளும் விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி பகுதியில் உள்ள சாலையோர உணவு விடுதிகளை மிக நன்றாக அறிவார்கள். கன்னியாகுமரி, நாகர்கோவில், மதுரை தொடங்கி திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், என அனைத்து கழக பேருந்துகளும் இந்த சாலையோர உணவு விடுதிகளில் இரவு நேரங்களில் ஓரம் கட்டப்படுவது வழக்கம்.
பேருந்துகளுக்காகவே காத்திருக்கும் ஓட்டல் பணியாளர்கள் பேருந்துகளை தடதடவென்று தட்டி டீ, காபி, சிற்றுண்டி, சாப்பாடு சாப்பிடுவோர் இறங்குங்கள் என்று குரல் கொடுப்பார்கள். ஓட்டுநர், நடத்துநர்களும் பத்து நிமிடத்திற்குப் பேருந்தை நிறுத்துவார்கள். அதற்குள் சாப்பிட்டு வந்து விடுங்கள் என்று எச்சரிக்கை செய்வதும் வழக்கமாக இருக்கும். ஆனால் இந்த உணவு விடுதிகளுக்குச் சென்ற ஒருவர் கூட அந்த உணவு விடுதிகளைத் திட்டாமல் திரும்பியதே இல்லை.
காரணம், ஒரு தோசை 100 ரூபாய், ஒரு செட் பரோட்டா 80 ரூபாய், குடிநீர் பாட்டில் 40 ரூபாய் என்று வெளிமார்க்கெட்டை விட ஐந்து மடங்கு விலை கூடுதலாக இந்த கடைகளில் விற்கப்படுவது வழக்கம். அதேபோல கழிவறைகளிலும் கூட கொள்ளை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உணவிலும் தரம் இருக்காது, கழிவறையிலும் சுகாதாரம் இருக்காது என்ற நிலையில் பயணிகள் தலையில் அடித்துக் கொண்டே பேருந்துகளில் திரும்பி வந்து உட்காருவது தொடர்கதையாக இருந்துவருகிறது.
தமிழ்நாடு அரசு சார்பில் சாலையோர உணவு விடுதிகள் தொடர்பாக பல்வேறு விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதிக விலைக்கு உணவுப் பொருட்களை விற்கும் உணவு விடுதிகள் மீதும், சுகாதாரக் குறைவாக உள்ள கடைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவ்வாறு குறைகள் கண்டறியப்படும் ஹோட்டல்கள் இருக்கும் இடத்தில் பேருந்துகளை நிறுத்தக்கூடாது என்றும் போக்குவரத்துக் கழகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஓட்டுநர், நடத்துநர்களுக்குத் தனி அறையில் வைத்து சிற்றுண்டி சாப்பாடு போன்றவை கொடுக்கக் கூடாது என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, சுகாதாரக் குறைவான ஓட்டல்கள் சீல் வைக்கப்படும் நிகழ்ச்சியும் நடந்து வருவது. இது ஒரு புறம் இருக்க இது போன்ற பிரச்னைகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் புதிய ஒருங்கிணைந்த திட்டம் ஒன்று தீட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் படி நெடுஞ்சாலைகளில் சகல அம்சங்களுடன் கூடிய புதிய வடிவிலான உணவகங்கள் அமைய உள்ளன. முதல் கட்டமாக இந்த ஓட்டல்கள், இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் எக்ஸ்பிரஸ் சாலைகளில் மட்டுமே அமைக்கப்பட உள்ளன.
இது குறித்து மத்திய அரசின் தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
*நெடுஞ்சாலைகளில் நெடுந்தூரம் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் கடமை என்ற நிலையில் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் எக்ஸ்பிரஸ் சாலைகளில் பயணிகள் நலன் கருதி "way side amenities" என்ற தலைப்பில் புதிய திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகளில் மொத்தம் 600 இடங்களில் ஒருங்கிணைந்த பொதுமக்களுக்கான பயன்பாட்டு வளாகம் அமைக்கப்படவுள்ளது.
* இந்த பயன்பாட்டு வளாகமானது தேசிய மற்றும் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையின் ஒவ்வொரு 40 முதல் 60 கிமீ தூரத்திற்கு இடையில் ஒன்று என்ற அடிப்படையில் மொத்தம் 600 இடங்களில் அமைக்கப்படும்.
* பயன்பாட்டு வளாகத்தில் பெட்ரோல் பங்க், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி, உணவகம், ரீடைல் ஷாப், ஏடிஎம் மையம், குழந்தைகள் விளையாடும் இடம், மருத்துவம் மற்றும் கிளினிக், கழிவறை குளியலறை, வாகனம் பழுது நீக்கும் மையம், ஓட்டுநர்களுக்கான ஓய்வறை, அந்தந்த பகுதி கைவினைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கைவினைப் பொருட்கள் விற்பனையகம் போன்ற அனைத்து அம்சங்களும் இடம் பெறும்.
தற்போது இதற்கான ஒப்பந்தப்புள்ளி மத்திய தரைவழி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும்" என கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் எங்கே!:
- தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தம் 1 லட்சத்து 52 ஆயிரத்து 183 கிமீ சாலைகள் உள்ளன.
- இதில் தேசிய நெடுஞ்சாலை என்ற வகையில் 4873 கிமீ சாலை உள்ளது.
- மாநில நெடுஞ்சாலை என்ற அடிப்படையில் 10 ஆயிரத்து 549 கிமீ சாலை உள்ளது.
- மாவட்ட முதன்மை சாலை என்ற பட்டியலில் 11,315 கிமீ சாலை உள்ளது.
- மாவட்ட இதர சாலைகள் என்ற பட்டியலில் 34 ஆயிரத்து 937 கிமீ சாலைகள் உள்ளன
- உள்ளாட்சிகளைச் சார்ந்த சாலைகள் என்ற பட்டியலில் 90 ஆயிரத்து 59 கிமீ சாலைகள் உள்ளன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரைத் தேசிய நெடுஞ்சாலைகள் என்ற பட்டியல் உள்ள 25 சாலைகள் மாநிலத்தில் குறுக்கும் நெடுக்குமாகச் செல்கின்றன. இதில் மத்திய அரசின் பயன்பாட்டு வளாகம் அமையும் சாலைகள் விவரம்:
* NH 32: சென்னையிலிருந்து திண்டிவனம், புதுச்சேரி, கடலூர் வழியாக நாகை வரை 673 கிமீ.
* NH 36: விக்கிரவாண்டி முதல் மானாமதுரை மொத்தம் 349 கிமீ.
* NH 38: ஓசூர் - வேலூரில் இருந்து விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை வரை மொத்தம் 568 கிமீ.
* NH 44: ஓசூரில் இருந்து கன்னியாகுமரி வரை மொத்தம் 627 கிமீ நீளம்.
* NH 48: சென்னையிலிருந்து ஓசூர் வரை 237 கிமீ.
* NH 77: கிருஷ்ணகிரியில் இருந்து வாணியம்பாடி வழியாக திண்டிவனம் வரை 176 கிமீ.
* NH 79: சேலத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை வரை 134 கிமீ.
* NH 81: சாலை கோவையில் இருந்து திருச்சி; திருச்சியில் இருந்து கீழப்பழுவூர், ஜெயங்கொண்டம் காட்டுமன்னார்குடி வழியாக சிதம்பரம் வரை 321 கிமீ.
* NH 83: கோவையிலிருந்து பழனி வரை பிறகு ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், நாகை வரை மொத்தம் 389 கிமீ.
* NH 85: போடியில் இருந்து உசிலம்பட்டி வரை, பிறகு மதுரையிலிருந்து தொண்டி வரை என்று மொத்தம் 225 கிமீ.
* NH 87: திருபுவனத்திலிருந்து மானாமதுரை வழியாக தனுஷ்கோடி வரை 174 கிமீ.
* NH 136: தஞ்சாவூரிலிருந்து கீழப்பழுவூர், அரியலூர், பெரம்பலூர், ஆத்தூர் வரை 140 கிமீ.
* NH 179ஏ: சேலத்தில் இருந்து வாணியம்பாடி வரை 141 கிமீ.
* NH 181: கோவையில் இருந்து கூடலூர் வரை 171 கிமீ.
* NH 183: திண்டுக்கலில் இருந்து குமுளி வரை 109 கிமீ நீளம்.
* NH 536: திருமயத்தில் இருந்து காரைக்குடி வழியாக ராமநாதபுரம்.
* NH 544: சேலத்தில் இருந்து கோவை - வாளையார் அணைக்கட்டு வரை.
* NH 544H: தொப்பூர் முதல் ஈரோடு வரை.
* NH 744: திருமங்கலத்தில் இருந்து செங்கோட்டை புளியரை வரை.
* NH 948: கர்நாடக மாநிலம் ஹாசனூர் என்ற இடத்தில் இருந்து பண்ணாரி சத்தியமங்கலம் வழியாக கோவை வரை 119 கிமீ.
இவ்வாறு தேசிய நெடுஞ்சாலைகள் தமிழ்நாட்டில் ஆங்காங்கே குறுக்கே சென்றாலும், பிரதான நெடுஞ்சாலைகள் பட்டியலில் NH 7 எனப்படும் ஸ்ரீநகர் to கன்னியாகுமரி என்ற இந்த தேசிய நெடுஞ்சாலை தூரம் 2369 கிமீ ஆகும்.
* அதே போல NH 5 என்ற சாலை கொல்கத்தாவில் இருந்து சென்னை வரை வருகிறது. இதன் மொத்த நீளம் 1659 கிமீ ஆகும்.
* NH 66: என்ற பெயரில் மகாராஷ்டிராவில் இருந்து கன்னியாகுமரி வரை ஆயிரத்து 593 கிமீ.
* NH 44: தமிழகத்தின் கடைசி ஊரான ஓசூரில் இருந்து கன்னியாகுமரி வரை 627 கிமீ நீளம்.
* திருச்சியில் இருந்து சென்னை வரையான NH45
* NH 45b: என்ற பிரிவில் வரும் திண்டிவனம், தஞ்சாவூர், மானாமதுரை என்ற சாலையிலும் பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர்
மானாமதுரை சாலைகளும் அடங்கும்.
தமிழகத்தில் போக்குவரத்து கழக அங்கீகாரம் பெற்ற சாலையோர உணவகங்கள்:
* மதுரை - தூத்துக்குடி சாலையில் ஹோட்டல் நெல்லை ஆர்யாஸ் அமைவிடம் மேலக்கரந்தை தூத்துக்குடி. அதே மேல கரந்தையில் ஹோட்டல் ரமேஷ்.
* சென்னை வேலூர் தடத்தில் ஹோட்டல் ஜே.பி. அமைவிடம்: பாலு செட்டி, சத்திரம், காஞ்சிபுரம்.
* திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம், சித்தணி என்ற இடம் அருகே உள்ள ஓட்டல் அர்ச்சனா.
* ரியான்சிகா உணவகம் ஆர்.ஆர்.நகர், விருதுநகர்.
* சேலம் - கோவை வழித்தடத்தில் ஹோட்டல் ஆர்யாஸ் விஜயமங்கலம் ஈரோடு.
* பெங்களூரு - கிருஷ்ணகிரி வழித்தடத்தில் ஹோட்டல் சரவண பவன், குருபரப்பள்ளி.
* சேலம் - மதுரை வழித்தடத்தில் ஹோட்டல் மூர்த்தி, வேடசந்தூர்.
* கோவை - மதுரை வழித்தடத்தில் ஹோட்டல் கிருஷ்ண பவன், தாராபுரம்.
* திருப்பதி - சென்னை வழித்தடத்தில் பாலாஜி சரவணபவன், திருப்பதி.
* வந்தவாசி - திண்டிவனம் வழித்தடத்தில் தீப்ஷிகா உணவகம், வந்தவாசி.
* மதுரை - திருச்சி வழித்தடத்தில் ஹக்கீம் ரெஸ்டாரண்ட் மணிகண்டம், திருச்சி.
மேலும் வழக்கம்போல, * விக்கிரவாண்டி அரிஸ்டோ ஹோட்டல்.
* திருப்பதி - வேலூர் வழிதடத்தில் ஹோட்டல் சரவண பவன், வேப்பம்பள்ளி.
* சென்னை - பாண்டிச்சேரி கிழக்கு கடற்கரை சாலை ஓட்டல் ஈசிஆர் -இன், கல்பாக்கம்.
* அதே சென்னை - பாண்டி வழித்தடத்தில் ஹோட்டல் செந்தூர், மரக்காணம்.
* சங்ககிரி வைகுந்தம் டோல்கேட் ஹோட்டல் ஆனந்த பவன்.
* விக்கிரவாண்டி ஸ்ரீ அன்னபூர்ணா ஹோட்டல்.
* கோவை - சென்னை வழித்தடத்தில் செங்கம்பள்ளி அக்ஷயா ஹோட்டல்.
* விக்கிரவாண்டியில் ஓட்டல் சரவணபவன்.
* கோவை சேலம் வழித்தடத்தில் பள்ளக்காபாளையம் ஸ்ரீ சரவணபவன்.
* பெங்களூரு - சென்னை வழித்தடத்தில் ஹோட்டல் உதயா, பிள்ளை குப்பம் கிருஷ்ணகிரி.
* உளுந்தூர்பேட்டை பாலாஜி பவன்.
* திருத்தணி ஹோட்டல் ஜனனி.
* விக்கிரவாண்டி ஆனந்த பவன்.
* கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி ஸ்ரீ ஆனந்தபவன்.
* உளுந்தூர்பேட்டை ஹோட்டல் ஸ்ரீ பிரசன்ன பவானி.
* செங்கம்பள்ளி பைரவி ஹோட்டல்.
இந்த ஓட்டல்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசின் போக்குவரத்துக் கழக நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டலாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஓட்டல்களில் மட்டும் தான் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட வேண்டும் என்பதும் தமிழக அரசின் உத்தரவு. பட்டியலில் உள்ள உணவகங்கள் குறைவாக உள்ளது. பேருந்துகள் நிற்கும் இடம் மிக அதிகமாக இருக்கிறது. மற்ற ஓட்டலுக்கு அனுமதி இல்லையா என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்படுவது இயல்புதான்.
அவ்வாறு சந்தேகம் உள்ளவர்கள், பேருந்து நிறுத்தப்பட்டுள்ள ஹோட்டல் முகப்பில், இந்த ஓட்டல் தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டு போக்குவரத்துக் கழக அனுமதி பெற்ற ஓட்டல் என்ற நீல நிற போர்டு உள்ளதா என்று கவனியுங்கள். இல்லையேல் அரசு வெளியிட்டுள்ள தொலைப்பேசி எண் 1800-599-1500 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.
இதையும் படிங்க: "அந்த மனசு தான் சார் கடவுள்": தெரு நாய்களுக்காக வீட்டையே தானம் செய்த தந்தை, மகன்!