மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில், பாத யாத்திரையைத் தொடங்கிவைக்கவந்த பாஜக மூத்தத் தலைவர் இல. கணேசன் அரியலூர் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை;d சந்தித்தார். அப்போது சீமான் பற்றி செய்தியாளர் எழுப்பியக் கேள்விக்கு, சீமான் பேசியது புதிய கருத்து அல்ல; ஆனால் அவர் பேசியது ஆபத்தான கருத்து எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ”சுட்டுக்கொல்லப்பட்டு இறந்தவர் தனிநபர் அல்ல, அவர் பாரத நாட்டின் முன்னாள் பிரதமர். அந்நியநாட்டு சக்தி வந்து பிரதமரை சுட்டுக் கொன்றதாகத்தான் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அந்த நிகழ்வைப் பார்ப்பார்கள். ஏழு பேர் விடுதலை என்பது தமிழ்நாட்டின் ஆளுநர் கையில்தான் உள்ளது. ஆளுநர்தான் அதில் முடிவெடுப்பார்” என்றும் கூறினார்.
பொருளாதார வீழ்ச்சிப்பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு “இந்தியப் பொருளாதார வீழ்ச்சி தற்காலிகமானதுதான். விரைவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதை சரிசெய்வார். பிரதமர், சீன அதிபரை சந்தித்துப் பேசியதையடுத்து விரைவில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்” எனவும் பதிலளித்தார்.
மேலும், தமிழ்நாட்டின் பாஜக தலைவர் தேர்வு டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளதாகவும் தற்போதுதான் அதற்கான பொறுப்பாளர்கள் தேர்வு நடைபெற்றுவருகிறது எனவும் பாஜக, அதிமுக கூட்டணியில்தான் தொடர்ந்து இருந்துவருகிறது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: