அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள முத்துசேர்வமடம் கிராமத்தைச் சேர்ந்தவர் நிர்மலா (54). இவரது வீட்டின் அருகில் வேலி அமைப்பது தொடர்பாக கடந்த ஒரு ஆண்டாக பக்கத்து வீட்டு உரிமையாளர் மைனர் என்பவருடன் தகராறு இருந்துவந்துள்ளது.
இதுகுறித்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடம் நிர்மலா மனு அளித்துள்ளார். இதனையடுத்து மீன்சுருட்டி காவல் துறையினர் இருவரையும் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை நிர்மலா வேலி அமைப்பதற்கு குச்சி ஊன்றியுள்ளார். இதனை அந்தப் பக்கத்து வீட்டு உரிமையாளர் அப்புறப்படுத்தி நிர்மலாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கையில் மண்ணெண்ணெய் கேனுடன் அரியலூரில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு இன்று நிர்மலா வந்துள்ளார். காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் அலுவலகத்திலிருந்து வெளியில் வரும்போது தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தார். பின்னர் அங்கிருந்த காவல் துறையினர் அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: கணவன் திருநங்கையாக மாறியதால் மனைவி தீக்குளிக்க முயற்சி!