தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றும் மக்களை காவல் துறையினர் கண்டித்து வருகின்றனர்.
அந்த வகையில், அரியலூர் மாவட்டத்திலும் கரோனா தொற்று பாதிப்பு அதிகமாவதால் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் ரத்னா எடுத்து வருகிறார்.
அதன்படி, மூன்று வண்ண அடையாள அட்டை மூலம் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை வாங்கிச்செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தி கிருமி நாசினி தெளிக்கவும் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, சுமார் 3 ஆயிரம் சுகாதார பணியாளர்களை கொண்டு மாவட்டம் முழுவதும் நாளை கிருமி நாசினி தெளிக்கப்படவுள்ளது.
மருந்தகம் , பால் விற்பனை நிலையங்களை தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரத்னா தெரிவித்துள்ளார். இதுவரை அரியலூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்து சிவப்பு மண்டலமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முதியோர் இல்லத்தில் மூதாட்டிக்கு கரோனா தொற்று