பெரம்பலூரிலிருந்து தஞ்சாவூர் வரை 70 கி.மீ., தேசிய நெடுஞ்சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளது. பெரம்பலூருக்கும் தஞ்சாவூருக்கும் இடைப்பட்ட பகுதியில் அரியலூரில் ரயில்வே கிராசிங் உள்ளது. இதனால் அவ்விடத்தில் ரயில்வே துறை சார்பில் சேது பாரத திட்டத்தின் சார்பில் ரயில்வே மேம்பாலம், இணைப்பு மேம்பாலம் அமைக்கத் திட்டமிடப்பட்டு அதற்காக 38 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
இந்தப் பணிகள் கடந்த 2016ஆம் ஆண்டு ஜுலை மாதம் தொடங்கியது. தற்போது மேம்பாலப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் தேசிய நெடுஞ்சாலையை மேம்பாலத்துடன் இணைக்கும் வகையில் தார் சாலை அமைக்கும் பணியும்,வர்ணம் பூசும் பணியும் நடைபெற்று வருகிறது.
மேலும் அப்பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டுவிட்டதால், அப்பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்நத மக்கள் போக்குவரத்திற்காக பயன்படுத்தும் வகையில் இணைப்பு சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
இதற்காக நிலம் கையகப்படுததும் பணி நடைபெற்று வருகின்றது. இப்பாலம் மூன்று மாதங்களில் மக்களின் பயன்பாட்டிற்காக திறந்துவிடப்படும் என ரயில்வே துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்பாலம் பயன்பாட்டிற்கு வரும்போது சென்னையிலிருந்து தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்ல, இச்சாலையைப் பயன்படுத்துவோருக்கு பயண நேரம் குறைவதோடு எரிபொருள் செலவும் குறையும். மேம்பாலத்திற்கு அருகில் உள்ள மருத்துவமனை, அரசு அலுவலகங்களுக்குச் செல்லும் பொதுமக்கள், பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகளுக்குப் இப்பாலம் பயனுள்ளதாக இருக்கும்.
இதையும் படிங்க: கீழடி ஆறாம் கட்ட அகழாய்வில் தொடர்ந்து வெளியில் தெரியும் செங்கல் கட்டுமானம்