அரியலூர் மாவட்டத்தில் இதுவரை 380 பேருக்கு கரோனோ தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 365 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 15 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் சுகாதாரத் துறை சார்பில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு கரோனோ பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் வெளியிடப்பட்டது. இதில், தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பில் ஏழாவது இடத்திலுள்ள அரியலூர், கரோனா பரிசோதனை எண்ணிக்கையில் 37ஆவது இடமான கடைசி இடத்தில் உள்ளது.
குறிப்பாக, தொற்றுள்ள 13 பேர் கொண்ட தருமபுரி மாவட்டத்தில் 9 ஆயிரத்து 754 பரிசோதனைகளும், 14 பேர் பாதிப்பு கொண்ட நீலகிரி மாவட்டத்தில் 5,604 பரிசோதனைகளும், 35 பேர் பாதிப்புள்ள சிவகங்கை மாவட்டத்தில் 5,400 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆனால், 380 பேருக்கு பாதிப்பைக் கொண்டுள்ள அரியலூர் மாவட்டத்தில் வெறும் 3,950 பரிசோதனைகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட பதினைந்து நாள்கள் மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு, பரிசோதனை எடுக்கப்படாததுதான் காரணம் எனவும் கூறப்படுகிறது. எனவே அரியலூர் மாவட்டத்தில் சரியான உண்மைத்தன்மையுடன் பரிசோதனை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'கரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள என்ன முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன?' - கே. பாலகிருஷ்ணன்