அரியலூர் மாவட்டத்தில் உள்ள பிரபல ஏ.பி.என் துணிக்கடையில் பணிபுரிந்த நபருக்கு கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. இதன் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தக் கடைவீதி முழுவதும் மூடப்பட்டது.
தொடர்ந்து அந்தக் கடையின் ஊழியர்களுக்கு பரிசோதனை செய்தபோது அவர்களில் 20 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கடந்த 10 தினங்களுக்குள் துணிக் கடைக்குச் சென்ற வாடிக்கையாளர்கள், சம்மந்தப்பட்ட ஊழியருடன் தொடர்பில் உள்ளவர்கள் தாமாக முன்வந்து அரியலூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரத்னா அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் நகரில் தற்பொழுது கரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனையடுத்து பல்வேறு இடங்களில் கடை வைத்துள்ள வியாபாரிகள் தாங்களாகவே கடைகளை அடைத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஜூலை14) முதல் வரும் 19 ஆம் தேதிவரை நகைக்கடைகள், பல்பொருள் அங்காடிகள் அடைக்கப்படும் என வியாபாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
மேலும் அதில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சென்னையில் 77 விழுக்காடாக உயர்ந்த குணமடைந்தோர் எண்ணிக்கை