அரியலூர் மாவட்டம் அடுத்த எலந்தங்குழி பகுதியை சேர்ந்த மாணவர் விக்னேஷ். இவர் மருத்துவர் ஆக வேண்டும் என்பதற்காக நீட் தேர்வுக்கு பயிற்சி மேற்கொண்டு இரண்டு முறை தேர்வு எழுதியுள்ளார்.
இரண்டு முறையும் குறைவான மதிப்பெண் பெற்றுள்ளார். மூன்றாவது முறை தேர்வு நெருங்கி கொண்டு இருந்த நிலையில், நீட் தேர்வு குறித்த மன உளைச்சல் காரணமாக நேற்று (செப்.9) தற்கொலை செய்து கொண்டார்.
இவர் இறப்புக்கு பல்வேறு தலைவர்கள் கட்சி நிர்வாகிகள் வருத்தம் தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 7 லட்சம் நிதி உதவியும், அரசு வேலைவாய்ப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாமக சார்பில் ரூபாய் 10 லட்சம் வழங்கப்போவதாக அக்கட்சித் தலைவர் ஜிகே மணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
குடும்பத்தினரை பாமக நிர்வாகிகள் சந்தித்து நிதியுதவியை வழங்குவர். நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் அதே நேரத்தில் மாணவர்கள் எவரும் தற்கொலை போன்ற முடிவுகளை உணர்ச்சி வேகத்தில் எடுத்து விடக் கூடாது என்றும் பாமக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.