தமிழ்நாட்டில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மக்காச்சோளம் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. அவ்வாறு அரியலூரில் மட்டும் சுமார் 16,000 ஹெக்டேர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. மக்காச்சோளத்தின் அறுவடைக்காலம் 90 முதல் 110 நாள்கள் வரை மட்டுமே என்பதால் விவசாயிகள் அதிகம் பயிரிடுகின்றனர்.
ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பயிரிடப்படும் மக்காச்சோளம் ஜனவரி வரை அறுவடை செய்யப்படும். அறுவடை செய்யப்பட்டபின் அவற்றை விவசாயிகள் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களிலும், மொத்த வியாபாரிகளிடமும் மூட்டை ஒன்றுக்கு ரூ.2000 முதல் ரூ. 2500 வரை விற்பனை செய்வது வழக்கம்.
கடந்தாண்டு மக்காச்சோளம் சாகுபடியில் படைப்புழு தாக்குதல் அதிகமிருந்ததால் மகசூல் மிகவும் பாதிப்படைந்தது. அப்படியிருந்தும் மக்காச்சோள விற்பனை பாதிக்கவில்லை. ஆனால் இந்தாண்டு சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளம் ஊரடங்கு காரணமாக விற்பனை செய்யமுடியாமல் தேங்கியுள்ளது.
இது குறித்து அரியலூர் விவசாயிகள் கூறுகையில், "அரியலூரில் பொய்யா நல்லூர், குணமங்கலம், ஆண்டிபட்டகாடு, பூங்குழலி, கடம்பூர், செங்கனம் உள்ளிட்ட பகுதிகளில் மக்காச்சோளம் அதிகமாக விளைவித்துவருகிறோம். 1 ஏக்கர் சட்டி கலப்பைக் கொண்டு உரம் போட்டு உழுவதற்கு 2500 ரூபாய். ஏக்கருக்கு 3 மூட்டை வீதம் டி.ஏ.பி. உரம் 4500 ரூபாய். 2 மூட்டை யூரியா 600 ரூபாய். பொட்டாசியம் 1000 ரூபாய். விதை மூட்டைகள் 2400 ரூபாய். கலை எடுப்பதற்கு தலா ஒருவருக்கு 100 ரூபாய் என 3500 ரூபாய் என 15 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.
அதன்படி சாகுபடி செய்தால் ஏக்கருக்கு சுமார் 15 மூட்டைகள் மகசூல் கிடைக்கும். ஒரு மூட்டை 2500 ரூபாய் வீதம் ஏறத்தாழ 30 ஆயிரம் முதல் 38 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். கடந்தாண்டு சாகுபடியில் பட்டைப்புழுக்களின் தாக்குதலால் ஏக்கருக்கு 5 மூட்டைகள் வரை பாதிப்படைந்தன.
இருந்தும் மூட்டைக்கு 2500 ரூபாய் கிடைத்ததால் அடுத்த சாகுபடிக்கு கையில் காசு நின்றது. ஆனால் இந்தாண்டு ஊரடங்கு காரணமாக விற்பனைக்கூடங்களில் ஒரு மூட்டை ரூ.1500 வரை மட்டுமே விற்பனையாகிறது.
மொத்த வியாபாரிகளும் கொள்முதல் செய்ய வருவதில்லை. ஊரடங்கிற்குப்பின் விற்கலாம் என வைத்திருந்து ஏராளமான மூட்டைகள் எலிகளினாலும், புழுக்களினாலும் நாசமாகிவருகின்றன. அதனால் எங்கள் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிப்படைந்துள்ளது.
எனவே அரசு நேரடி மக்காச்சோள கொள்முதல் நிலையங்களை திறந்து மூட்டை ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ. 2000 ஆயிரம் வழங்க வேண்டும். கடன் வாங்கியே விவசாயம் செய்துவரும் எங்களுக்கு லாபம் இல்லை என்றால்கூட பரவாயில்லை அடுத்த சாகுபடிக்கும் வாங்கிய கடனுக்குமாவது உரிய விலை நிர்ணயிக்கப்பட வேண்டும்" என வருத்தத்துடன் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: விளைபொருட்களுக்கு விலைக்குறைவாக கேட்டதால் வெளி சந்தைகளுக்கு படையெடுத்த விவசாயிகள்!