அரியலூர் அருகே அரசு சிமெண்ட் ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையின் வளாகத்தில் சுமார் 700 கோடி மதிப்பில் புதிதாக கட்டடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கானப் பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் இதில் இன்று சோதனை ஓட்டம் நடைபெற்றது.
அப்போது சிமெண்ட் தயாரிக்க முக்கிய மூலக்கூறான சுண்ணாம்பு கற்களைக் கொண்டு செல்லும் கண்வே பெல்டில் எதிர்பாராத வகையில் தீ விபத்து ஏற்பட்டு எரிந்துவருகின்றது. இது 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டது.
இந்தப் பிரிவில் தீயானது மளமளவென பரவிவருகிறது. இதையடுத்து ஆலையின் தீயணைப்பு வீரர்கள், அரியலூர் தீயணைப்பு வீரர்கள் இணைந்து தீயை அணைத்துவருகின்றனர். இதனால், ஆலை வளாகம் முழுவதும் கரும் புகையாகக் காணப்படுகிறது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
புதிய தொழில்நுட்பத்தில் புதியதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் ஆலை பிரிவில் இவ்வாறு ஏற்பட்டுள்ள தீ விபத்து, அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.