நாட்டின் 74ஆவது சுதந்திர தின விழா நாளை (ஆகஸ்ட் 15) கொண்டாடப்படுகிறது. கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள உத்தரவில், சுதந்தி தின விழாவில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும், பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அரியலூர் மாவட்டத்தில் நாளை நடைபெறும் விழாவிற்கான ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று (ஆகஸ்ட் 14) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் பங்கேற்று தேசிய கொடியேற்றுதல், காவல்துறை அணிவகுப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும், நாளை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது ரத்து செய்யப்பட்டு, கரோனா பரவலை தடுக்கும் முன்களப் பணியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட உள்ளனர்.
கரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் நலன் கருதி ஒவ்வொரு வருடமும் சுதந்திர தின விழா அன்று நடத்தப்படும் கிராமசபை கூட்டங்கள், கோயில்களில் நடத்தப்படும் சமபந்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நாளை நடத்த அனுமதியில்லை என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: சுதந்திர தினத்தை முன்னிட்டு மின் விளக்குகளால் ஜொலித்த சென்னை விமான நிலையம்!