அரியலூர்: கிராம ஊராட்சிகளில் வெளிப்படைத் தன்மையுடன் சிறந்த நிர்வாகத்தை வழங்கி, அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்து, நீடித்த மற்றும் நிலைத்த வளர்ச்சி இலக்குகளை எட்டும் வகையில் செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு 2022ஆம் ஆண்டு முதல் உத்தமர் காந்தி விருது வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்தார்.
இதன்படி, மாவட்டத்திற்கு ஒரு கிராம ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு உத்தமர் காந்தி விருது மற்றும் 10 லட்ச ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, "உத்தமர் காந்தி விருதுக்குத் தகுதியுடைய கிராம ஊராட்சிகள் தங்களது விண்ணப்பங்களை இணையதளம் மூலம் அனுப்பி வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகள் http://tnrd.tn.gov.in/ என்ற அரசு இணையதளத்தில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி ஜனவரி 16ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதளத்தினுள் உள்நுழையக் கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் முகவரி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், பயனர் முகவரியில் அறிக்கை எண்.12-ஐ தேர்வு செய்து பூர்த்தி செய்ய வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
படிவம் நிரப்புவது தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "போகியில் பொருட்களை எரிக்க வேண்டாம்" சென்னை மாநகராட்சி புது முயற்சி!!