அரியலூர்: இது குறித்து அவர் வெளியிட்டுள்ளச் செய்தி குறிப்பில், "2023-2024 ஆம் ஆண்டிற்கான நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தினை சார்ந்த முன்னாள் தலைச்சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளையாட்டுத் துறையில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலானப் போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று, தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும்,
ரூ.6000/- வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதள முகவரி (www.sdat.tn.gov.in) மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க குறைந்தபட்ச தகுதிகளான தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.
மேலும், சர்வதேச அல்லது தேசியப் போட்டிகளில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாம் இடங்களில் வெற்றி பெற்று இருத்தல் வேண்டும். தகுதியான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மத்திய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகளில் பங்குப் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
அகில இந்திய பல்கலைகழகங்களுக்கு இடையேயான போட்டிகள், இந்தியப் போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள், மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம் அல்லது இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச அல்லது தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றவராக இருக்கலாம்.
விண்ணப்பதாரரின் வயது வரம்பு 2023 ஆம் வருடம் ஜனவரி மாதம் (31.01.2023) 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகவும், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6000-ல் இருந்து ரூ.15000-க்குள் இருத்தல் வேண்டும். மத்திய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் மாநில அரசின் ஓய்வூதியம் பெறுபவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. முதியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் (Veteran/Masters sports meet) வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஒய்வூதியம் பெறத் தகுதி இல்லை.
எனவே, அரியலூர் மாவட்ட விளையாட்டு வீரர்கள் மேலும் மேற்காணும் தகுதியுடையவர்கள் விண்ணப்பங்களை இணையதள முகவரி (www.sdat.tn.gov.in) யில் விண்ணப்பித்து பயனடையலாம். விண்ணப்பங்கள் 20.03.2023 தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 19.04.2023 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்குப் பின் விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின் அவர்களை 7401703499 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்" என்று ஆட்சியர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஓபிஎஸ் நீக்கம் செல்லும்; பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிட தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்