கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மே 3ஆம் தேதிவரை தேசிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து அரியலூர் மாவட்டத்திற்கு திரும்பிய 2,022 பேரும் அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு 28 நாள்களை முடித்துள்ளனர். இதில் அவர்கள் யாருக்கும் காய்ச்சல் அறிகுறிகள் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல் கேரளா, பெங்களூரு உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்தும் வருகை தந்த 800 நபர்களை காவல் துறையினர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையம், தனியார் கல்லூரி உள்ளிட்ட எட்டு இடங்களில் தங்கவைத்திருந்தனர்.
தினந்தோறும் இவர்களை வெப்பமாணி மூலம் காய்ச்சல் அறிகுறி உள்ளதா என்று மருத்துவ குழுவினர் கண்காணித்து வந்தனர். இதில் 14 நாள்களை நிறைவு செய்தவர்கள் படிப்படியாக வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.
இதனையடுத்து கரோனா முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த சுமார் 600 பேர் அவர்களது காலம் முடியும் முன்னரே இரவோடு இரவாக அவர்களது சொந்த ஊருக்கு வாகனங்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளனர்.
முகாம்களில் இருந்து செல்பவர்கள் அனைவரும் மறு அறிவிப்பு வரும்வரை அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அலுவலர்கள் உத்திரவிட்டுள்ளனர்.
இவர்களின் பராமரிப்பு செலவுகள் அதிகமாகின்றன. எனவே நிர்வாகச்செலவுகளை குறைப்பதற்காக முகாம்களில் உள்ளவர்களையும், இனி வருபவர்களையும் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கண்காணிக்க முடிவு செய்துள்ளதாக அலுவலர்கள் வட்டத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
முகாம்களில் இருந்து வீட்டிற்கு அனுப்பபட்டவர்களின் பட்டியலை வைத்துக்கொண்டு கிராம நிர்வாக அலுவலர்கள் அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்பதற்கான அடையாள ஸ்டிக்கரை ஒட்டத்தொடங்கியுள்ளனர்.