அரியலூர்: அரியலூர் மாவட்டம் பெரியதிருக்கோணம் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி விவசாயத்தையும், நாட்டுப்புற கலைகளை காப்பாற்ற ஒருமணிநேரம் வயலில் கரகமாடி நாற்றுநட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அரியலூர் மாவட்டம் பெரியதிருக்கோணம் கிராமத்தை சேர்ந்த வாய்பேசமுடியாத மாற்றுத்திறனாளி பாண்டியன்- மாலா தம்பதியினருக்கு கிருஷ்ணவேணி, பாலமுருகன் ஆகிய இருகுழந்தைகள் உள்ளனர்.
பிறவிலேயே கிருஷ்ணவேணி மற்றும் பாலமுருகன் ஆகிய இருவரும் காதுகேளாத, வாய்பேசமுடியாத மாற்றுத்திறனாளிகளாக பிறந்ததால் மனதளவில் அந்தக் குறைதெரியாமல் இருவரையும் நன்குவளர்த்து வந்துள்ளனர். குறிப்பாக 10ஆம் வகுப்பு படித்து வரும் தனது மகள் கிருஷ்ணவேணிக்கு கரகாட்டம் கற்றுக்கொடுத்து அவரது தன்னம்பிக்கை வளர்த்துள்ளார்.
இந்நிலையில் கிருஷ்ணவேணியின் திறமையை வெளிப்படுத்தவும், அழிந்துவரும் விவசாயம் மற்றும் நாட்டுப்புறக் கலைகளை காப்பாற்றவும் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்த பாண்டியன்- மாலா தம்பதியினர் உழவர் தினத்தில் வயலில் கரகமாடி நாற்றுநடும் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர்.
இதனையடுத்து தனது தலையில் கரகத்தை சுமந்த கிருஷ்ணவேணி சேறும்சகதியுமாக இருந்த வயலில் இறங்கி கரகமாடியபடி நாற்றுக்கட்டுகளை எடுத்துவந்து, சேற்றுவயலில் அமர்ந்து நாற்றுகளை நட்டார். ஒருமணி நேரம் தலைமையில் கரகத்தை இறக்காமல் தொடர்ந்து கரகமாடி நாற்றுகளை எடுத்தும், பின்னர் அமர்ந்து நாற்றுகளை நட்டும் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தினர் கிருஷ்ணவேணி. இவரின் திறமையை கிராம பெரியர்கள் உள்பட அனைவரும் வாழ்த்தினர். இந்த நிகழ்வு இந்திய புக்ஸ்ஆப் ரெக்கார்ட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணவேணியின் தாயார் மாலா கூறுகையில், “தனது குழந்தைகளின் வாய்பேசமுடியாத, காதுகேளாத குறைகளை பெரிதுப்படுத்தாமல், இயற்கையை ரசிக்கவேண்டும், இயற்கையை விவசாயத்தை காக்கவேண்டும், உணவு பொருள்களை விணாக்ககூடாது என்று சிறுவயதிலேயே கூறி வளர்த்து வந்துள்ளேன். விவசாயத்தில் ஈடுபாடுடன் கிருஷ்ணவேணி உள்ளதால் இன்று விவசாயத்தையும், நாட்டுப்புறக்கலையை காப்பாற்றவும் கரகமாடி நாற்றுநடும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்” என்று கூறியுள்ளார்.
10ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியான மாற்றுத்திறனாளி கிருஷ்ணவேணி மட்டும் சாதனையாளர் அல்ல. கணவன், மகன், மகள் என மூன்று பேரும் மாற்றுத்திறனாளிகளாக இருந்தும் வாழ்க்கையில் போராடி சாதனையாளர்களாக வளர்த்துவரும் தாயார் மாலாவும் ஒரு சாதனையாளர் என்றால் அதுமிகையல்ல. இவர்களின் அசாத்திய திறமை பாராட்டுக்குரியது.
இதையும் படிங்க: விவசாயம் தொழிலல்ல; வாழ்க்கை முறை - டிடிவி