டெல்லி: மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் தொடர் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கியது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதிவரை நடைபெற உள்ள இத்தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியா இன்று மட்டும் 1 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என நான்கு பதக்கங்களைப் பெற்று அசத்தியுள்ளது.
இதில், ஆடவர் ஈட்டி எறிதல் எஃப்-46 பிரிவில் இந்திய வீரர்களான தேவேந்திர ஜஜாரியா வெள்ளிப் பதக்கமும், சுந்தர் சிங் குர்ஜார் வெண்கலப் பதக்கமும் வென்று சிறப்பித்துள்ளனர்.
மதிப்பிற்குரியவருக்கு வாழ்த்து
இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில், தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா தேவேந்திர ஜஜாரியாவை பற்றி கூறியிருப்பதாவது, "மூன்றாவது முறையாக பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ள மதிப்பிற்குரிய மூத்தவரான தேவேந்திர ஜஜாரியா அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நீங்கள்தான் எங்களைப் போன்ற வீரர்களுக்கு உத்வேகத்தை அளிப்பவர்கள். சுந்தர் வெண்கலம் வென்றதற்கும் எனது பாராட்டைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்குமுன், தேவேந்திர ஜஜாரியா 2006 ஏதென்ஸ் ஒலிம்பிக்கிலும், 2016 ரியோ ஒலிம்பிக்கிலும் தங்கப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உலகின் உச்சியில் இருக்கிறேன் - உச்ச மகிழ்வில் தங்க மங்கை