டோக்கியோ: மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் தொடர் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கியது. வரும் 5ஆம் தேதிவரை நடைபெறும் இத்தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், டேக்வாண்டோ மகளிர் கே44-49 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில், இந்திய வீராங்கனை அருணா தன்வர், பெரு நாட்டு வீரர் லியோனர் எஸ்பினோசா கரன்சா உடன் மோதினார்.
ரெபிசாஜ் ஆட்டம்
இப்போட்டியில், அருணா தன்வர் 21-84 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியைத் தழுவியிருந்தார். இதையடுத்து, வெண்கலப் பதக்கப் போட்டிக்குத் தகுதிபெற வாய்ப்பளிக்கும், காலிறுதி ரெபிசாஜ் ஆட்டத்தில் (REPECHAGE) பங்கேற்கவிருந்தார். இந்நிலையில், காயம் காரணமாக அவர் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரைப் பரிசோதித்த சர்வதேச பாரா ஒலிம்பிக்கின் மருத்துவக்குழு (IPC), அவரின் காயத்தை ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். முதல் போட்டியில் ஏற்பட்ட காயத்தால், அவருக்கு லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்துள்ளனர்.
இளம் வீரர்
முன்னதாக, காலிறுதிக்கு முந்தைய போட்டியில் செர்பிய வீராங்கனையை 29-9 புள்ளிக்கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியிருந்தார், அருணா.
ஹரியானா மாநிலத்தின் பிவானி மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவரான அருணா தன்வர், வைல்டு கார்டு (Wild card entry) மூலம் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கிங் கோலியின் புதிய சாதனை; நிற்காது இந்த ரன் மெஷின்