ஹைதராபாத்: இந்தியாவில் கிரிக்கெட் விளைாட்டிற்கு அளிக்கும் முக்கியத்துவம் மற்ற விளையாட்டுகளுக்கு அளிக்கப்படுவதில்லை என்பது பெரும்பாலானோரின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. மேரி கோம் யார் என்று திடீரென கேட்டால், சற்று யோசிக்க வேண்டிய சூழல்தான் இங்கு இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ளதான் வேண்டும்.
இந்நிலையில், நடைபெற்று முடிந்த டோக்கியோ ஒலிம்பிக்கை இந்திய மக்கள் கூர்ந்து கவனித்தது விளையாட்டுத் துறையை சேர்ந்தவர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்குக்கு பிறகுதான் நீரஜ் சோப்ரா, லவ்லினா, வந்தனா கட்டாரியா என பொதுவெளியில் பெயர்கள் புழங்க ஆரம்பித்திருக்கின்றன.
இந்தப் புகழ் ஒன்றும் ஒரு இரவில் கிடைத்து விடவில்லை. ஆனாலும், இந்த புகழ்ச்சியெல்லாம் பதக்கம் வென்றதுக்கு முன்னர் கிடைத்திருந்தால் ஒருவித பதற்றத்தைதான் தந்திருக்கும் என்கிறார் டோக்கியோவில் வெண்கலம் வென்ற லவ்லினா.
நாடு திரும்பிய பின், வீடடைந்து வெற்றியை சுற்றத்தாருடன் லவ்லினா கொண்டாடிக் கொண்டிருந்த ஒரு தருணத்தில் ஈடிவி பாரத் ஊடகம் அவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டது.
அப்போது பேசிய அவர்," வெற்றிக்கு முன்னர் மக்களின் கவனம் நம் மீது இருப்பதைவிட, பதக்கம் வென்ற பிறகு கொண்டாடப்படுவதே நல்லது. மக்களும் வெற்றியாளர்களை தானே கொண்டாடுகிறார்கள். நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சி அளித்தது பெருமையாக உள்ளது” என்றார்.
பேட்டி சுருக்கம்:
நாட்டிற்காக பதக்கம் வென்றது குறித்து எப்படி உணருகிறீர்கள்?
இந்தியாவுக்கு பதக்கத்தோடு திரும்பியது மகிழ்ச்சியளித்தாலும், தங்கம் வென்றிருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.
வெண்கலம் வென்றது திருப்தி அளிக்கவில்லையா?
நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன், நான் அந்தப் போட்டியில் தோல்வியடைவேன் என்று நினைத்துப் பார்க்கவே இல்லை. நான் டோக்கியோவிற்கு சென்றதே தங்கம் வெல்லதான். தங்கத்தில் கவனமாக இருந்துதான் அடுத்தடுத்த போட்டிகளுக்கு முன்னேறினேன்.
ஆனால், வெண்கலம் வென்றதற்குப் பிறகு, இது ஒரு தொடக்கம்தான் என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். தங்கம் இலக்காக இருந்ததால் வெண்கலத்திற்கு என்னால் சந்தோஷப்பட முடியவில்லை. இந்தியாவிற்கு தங்கம் பெற்றுதர இயலவில்லை என்று மிகவும் வருத்தமடைந்தேன்.
இப்போதும் நீங்கள் மகிழ்ச்சியாக இல்லையா?
குறைந்தபட்சம் பதக்கமாவது கிடைத்ததே என்று மகிழ்ச்சியடைந்தேன். நிச்சயம், அடுத்த பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை வெல்ல கடினமாக பயிற்சியெடுப்பேன். தோல்வியில் இருந்து மீள எனக்கு இரண்டு நாள்கள் ஆனது.
மக்கள் பதக்கம் வென்றதற்குப் பிறகு கொண்டாடுவதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
நான் குத்துச்சண்டையை விளையாடத் தொடங்கியபோது சற்று கடினமாகவே இருந்தது. யாரும் பெரிய அளவில் ஊக்கவிக்க மாட்டார்கள். இப்போது பதக்கம் வென்ற பிறகு மக்கள் எங்களை கவனிக்கத் தொடங்கியுள்ளனர்.
ஆனால், மக்களின் எதிர்பார்ப்பு ஒரு வீரரின் மேல் அதிகமாக இருக்கும்பட்சத்தில், அவரால் போட்டிக்கு சிறப்பாகத் தயாராக முடியாது. மக்களும் பதக்கம் பெற்றால் தானே கொண்டாடுகிறார்கள்.
நாங்கள் 100 விழுக்காடு உழைப்பை செலுத்தினாலும், மக்களுக்கு போட்டியின் முடிவுதான் முக்கியம். இதற்கு நான் வருத்தப்பட மாட்டேன். என் மீது கவனம் இல்லாமல் இருக்கும்போது என்னால் போட்டிக்கு சிறப்பாக தயாராக முடிந்தது.
நீங்கள் விளையாடத் தொடங்கியபோது சந்தித்த பிரச்னைகளை கூறுகிறீர்களா?
நான் விளையாடத் தொடங்கும்போது எனக்குத் துணையாக யாருமில்லை. தேசிய, சர்வதேச போட்டிகளுக்கு முன்னேறிய பிறகு, இந்திய விளையாட்டு ஆணையம், இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு போன்றவை எனக்கு உறுதுணையாக இருந்தன.
இது எல்லா வீரர்களுக்கும் நடப்பதுதான். ஆரம்பத்தில் நீங்கள் உங்களை நிரூபித்துக்காட்ட வேண்டும். அதன்மூலம், உங்களுக்கு பல உதவிகள் கிடைக்கும். உங்கள்மீது நீங்கள் நம்பிக்கை வைத்திருந்திருந்தால், திறமைகளை நிரூபித்துக் காட்ட முடியும்.
நான் முதலில் குத்துச்சண்டை விளையாடுவதற்கு முன்னர் தற்காப்புக்கலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். நான் குத்துச்சண்டைக்கு மாறிய பிறகு பெரிய பிரச்னையை ஏதும் சந்திக்கவில்லை. இந்திய விளையாட்டு ஆணையம் எனக்கான விளையாட்டு உபகரணங்களை வழங்கி எனக்கு ஆதரவளித்தது.
தேசிய பயிற்சி முகாமில் நான் சேர்ந்து ஒரு ஆண்டிலேயே சர்வதேச அளவில் சப்-ஜூனியர் போட்டிகளில் விளையாடத் தொடங்கினேன். தற்காப்புக்கலைகள் பின்னணி இருந்ததால் பல நன்மைகள் இருந்தன. முய் தாய் என்னும் தற்காப்புக்கலை எனது உடலை வலுவாக வைக்க உதவியது. முய் தாய் போட்டியால்தான் நான் ஒலிம்பிக் சென்றேன் என்று கூற மாட்டேன், ஆனால் அதுவும் உதவியது என்றே கூறுவேன்.
உங்களின் வெற்றி மற்றவர்களை எப்படி ஊக்குவிக்கும் என்று நிங்கள் நினைக்கிறீர்கள்?
என்னால் நிறைய சிறுவர்கள் ஊக்கமடைவார்கள் என்று நான் நினைக்கிறேன். ஒருவர் நன்றாக விளைாயாடும்போது, அவர்களைப் பார்த்து நிறைய சிறுவர்கள் விளையாட்டை நோக்கி படையெடுப்பார்கள். எல்லா துறைகளுக்கும் இது பொருந்தும். நான் வென்ற பதக்கம் பல பேருக்கு ஊக்கமளிக்கும். மேலும், கிராமத்தில் இருந்து வருவோரின் திறமையையும் துறையினர் புரிந்து கொள்வார்கள்.
அடுத்தது என்ன?
என்னுடைய பயணம் இந்தியாவுக்கு தங்கத்தைப் பெற்றுத் தருவதுதான். எனது தங்கக் கனவு இன்னும் முடியவில்லை. அடுத்த ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல இப்போதிருந்தே தயாராகி வருகிறேன். ஒன்றரை மாதம் சற்று ஓய்வெடுத்த பின் மீண்டும் பயிற்சிக்குத் திரும்புவேன்.
அடுத்த பதக்கத்தை வெல்ல நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமே. அது கடினமாக இருக்காதா? நீங்கள் எதிலிருந்து அந்த ஊக்கத்தைப் பெறுகிறீர்கள்?
நாட்டிற்காக எதையாவது சாதித்தாக வேண்டும் என நீங்கள் எண்ணினால், உங்களால் அந்த ஊக்கத்தைப் பெற முடியும். ஒரு தனிநபராக, உங்கள் கனவுகளுக்காக உழைக்கும்போது அது ஒருநாள் நிச்சயம் நிறைவேறும் என்ற ஊக்கம் உங்களுக்குள் இருந்துகொண்டதான் இருக்கும்.
இதையும் படிங்க: ஈட்டி எறிதல் தரவரிசை: தங்கத்திற்குப் பிறகு இரண்டாவது இடத்தில் நீரஜ்!