டோக்கியோ(ஜப்பான்): ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், தங்கப் பதக்கம் வென்றவர்களின் நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்படும். அந்த வேளையில், தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்ற நாடுகளின் தேசியக் கொடியும் ஏற்றப்படும்.
அந்த வகையில், நேற்று(ஆகஸ்ட். 7) ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றதால் ஒலிம்பிக் அரங்கில் நம் நாட்டின் தேசிய கீதம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலித்தது.
2008ஆம் ஆண்டு சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில், இந்திய வீரர் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்றார். அப்போது, ஒலித்த நம் தேசிய கீதம், நேற்று டோக்கியோ ஒலிம்பிக்கில் மீண்டும் உயிர்பெற்றது.
வரலாற்றில் தடம்
ஒலிம்பிக் வரலாற்றிலேயே, இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு தடகளப்பிரிவில் முதல் தங்கப்பதக்கம் நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார். இது ஒரு வரலாற்றுச் சாதனை. ஒலிம்பிக் போட்டியில் முதன்முறையாகப் பங்கேற்றவர் நீரஜ். தனக்குக் கிடைத்த முதல் தகுதிச்சுற்றிலேயே 86.65 மீ. தூரம் ஈட்டியை எறிந்து இறுதிச் சுற்றுக்குத் தகுதி முன்னேறினார்.
இறுதிப்போட்டி வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட நீரஜ், எறிந்த ஈட்டி 87.58 மீ. தூரத்தை எட்டி இந்தியாவை உயர்த்தியது. தங்கப்பதக்கமும் கிடைத்தது. ஈட்டியை எறிந்த உடனே, தனது கைகளை உயர்த்தி நீரஜ் இந்திய மக்களை மெய் சிலிர்க்க வைத்தார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கமும், அதுவும் தடகளத்தில் கிடைத்ததும் இந்திய மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. டோக்கியோ ஒலிம்பிக்கில் தனி நபர் போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை நீரஜ் தக்கவைத்துவிட்டார்.
இதையும் படிங்க: TOKYO OLYMPICS: நீரஜின் தங்கம்... இந்தியாவின் பத்தாவது தங்கம்!