டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. பதக்கப்பட்டியலில் சீனா, அமெரிக்கா, ஜப்பான் முறையே முதல் மூன்று இடங்களில் தொடர்கின்றன. இன்று நடைபெற்ற ஹாக்கிப் போட்டியில் இந்திய ஆண்கள் அணி ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது. இதன்மூலம் இந்திய அணி 41 ஆண்டுகளுக்குப் பிறகு தனது பதக்க கனவை நனவாக்கியுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஹாக்கி ஆண்கள் அணி இதுவரை எட்டு தங்கப்பதங்களைப் பெற்றுள்ளது. 1928இல் தொடங்கிய இந்த தங்க வேட்டை 1980 வரை நீடித்தது. இதையடுத்து தங்கம் கனவாகவே நீடித்துவருகிறது.
ஒலிம்பிக்கில் முதன்முறையாக 73 விழுக்காட்டினர்
அதேபோல், ஒரேமுறை (1960) வெள்ளியைக் கைப்பற்றியிருக்கிறது. மேலும் வெண்கலப் பதக்கத்தை மூன்று முறை (1968, 1972, டோக்கியோ 2020) இந்திய ஹாக்கி ஆண்கள் அணி கைப்பற்றியுள்ளது. கடைசியாக இந்திய அணி 1980ஆம் ஆண்டு பதக்கத்தைக் (தங்கம்) கைப்பற்றியிருந்தது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில் வென்றதன் மூலம் 41 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் (வெண்கலம்) வென்றுள்ளது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய ஹாக்கி ஆண்கள் அணியில் 73 விழுக்காடு வீரர்கள் முதன்முதலாக ஒலிம்பிக்கில் கலந்துகொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி வெற்றிபெற்றதையடுத்து பல்வேறு தலைவர்களும், நாட்டு மக்களும் இந்திய ஹாக்கி ஆண்கள் அணிக்கு தங்களது வாழ்த்துகளைக் கூறிவருகின்றனர். அந்த வகையில், இந்திய ஹாக்கி ஆண்கள் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல், ராகுல் காந்தி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் தங்களது வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
ஒலிம்பிக் ஆண்டுகளும், பதக்கங்களும்
- 1928 - தங்கம்
- 1932 - தங்கம்
- 1936 - தங்கம்
- 1948 - தங்கம்
- 1952 - தங்கம்
- 1956 - தங்கம்
- 1960 - வெள்ளி
- 1964 - தங்கம்
- 1968 - வெண்கலம்
- 1972 - வெண்கலம்
- 1980 - தங்கம்
- 2021 (டோக்கியோ 2020) - வெண்கலம்
இதில் சிறப்புத் தகவல் என்னவென்றால், ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா நான்காவது இடத்தை அடைந்தாலே பதக்கத்தைக் கைப்பற்றியிருக்கிறது என்பது கவனிக்கத்தக்க அம்சமாகும். அந்த வகையில் 12 முறை நான்காவது இடத்தை அடைந்த பின்னர், தொடர்ந்து விளையாடிய ஆட்டங்களில் தங்கம் (8), வெள்ளி (1), வெண்கலம் (3) என வென்று சாதனைப் படைத்துள்ளது.
இதுபோக, பதக்கங்கள் வெல்லாத போட்டிகளில் இந்திய அணி பெற்ற இடங்கள்:
- 1984 - ஐந்தாம் இடம்
- 1988 - ஆறாம் இடம்
- 1976, 1992, 2000, 2004 - ஏழாம் இடம்
- 1996, 2016 - எட்டாம் இடம்
- 2012 - பன்னிரெண்டாம் இடம்
இதையும் படிங்க: 41 வருட தவம்: ஒலிம்பிக் ஹாக்கியில் வெண்கலம் வென்றது இந்தியா