சர்வதேச டென்னிஸ் விளையாட்டின் மிகவும் பிரபலமான யூ.எஸ்.ஓபன் 2020 தொடர் தற்போது, அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று (செப்.03) நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று ஆட்டத்தில், இந்தியாவின் நட்சத்திர வீரர் சுமித் நகல், உலகின் இரண்டாம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டோமினிக் தீமை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய டோமினிக் தீம், முதல் இரண்டு செட்களை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி சுமித் நகலுக்கு அதிர்ச்சியளித்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மூன்றாம் செட்டிற்கான ஆட்டத்திலும் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீம், 6-2 என்ற கணக்கில் மூன்றம் செட்டையும் கைப்பற்றினார்.
இதன் மூலம் யூ.எஸ்.ஓபன் டென்னிஸ் தொடரின், ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று ஆட்டத்தில் டோமினிக் தீம் 6-3, 6-3, 6-2 என்ற செட் கணக்குகளில் இந்தியாவின் சுமித் நகலை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
முன்னதாக சுமித் நகல் யூ.எஸ்.ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம், கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் காலமானார்!