வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 13ஆம் தேதி வரை யுஎஸ் ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் தொடர் நடக்கவுள்ளது. இதனிடையே அமெரிக்காவில் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.
இதனால் நட்சத்திர டென்னிஸ் வீரர்கள் பலரும் யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் விளையாடுவது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் நட்சத்திர மகளிர் டென்னிஸ் வீராங்கனைகள் ஸ்விட்டோலினா, கிகி பெர்ட்டன்ஸ் ஆகியோர் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து எலினா ஸ்விட்டோலினா தனது ட்விட்டர் பக்கத்தில், ''தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கப் போவதில்லை. இந்தத் தொடரில் விளையாட வாய்ப்பு கொடுத்த நிர்வாகிகள், ரசிகர்கள் ஆகியோருக்கு நன்றி செலுத்திக் கொள்கிறேன்.
யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரை பாதுகாப்புடன் நடத்த பலரும் முயற்சித்து வருகின்றனர். இருந்தும் எனக்கும், என் குழுவினருக்கும் போதிய பாதுகாப்பு இல்லை என்றே நான் நினைக்கிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து கிகி பெர்ட்டன்ஸ் பேசுகையில், ''பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு நான் சின்சினாட்டி, யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன். தற்போதைய கரோனா சூழல் கவலையளிக்கிறது. அதனால் அனைவரின் பாதுகாப்பே முக்கியம். சூழல் கட்டுக்குள் வந்த பின் நான் மீண்டும் டென்னிஸ் தொடர்களில் பங்கேற்பேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
மகளிர் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஆஷ்லி பார்ட்டி, முன்னதாக யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிஎஸ்கே வீரர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் - சிஎஸ்கே