இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் வரும் ஜனவரி 20ஆம் தேதி மெல்போர்னில் தொடங்கவுள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக தகுதிச் சுற்று ஆட்டங்கள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், ஆடவர் ஒற்றையர் பிரவில் இந்தியாவின் சுமித் நாகல், எகிப்தின் முகமது சஃப்வாத்துடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் நாகல் 6-7, 2-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதனால், இவர் ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் பிரதான சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டார். கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் முதல் சுற்றில் ஃபெடரருடன் பலப்பரீட்சை நடத்தியதன் மூலம், சுமித் நாகல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இதேபோல நடைபெற்ற இரண்டாம் தகுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 1-6, 6-2,6-1 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் ஹன்ஃப்மேனை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். நாளை நடைபெறும் இறுதிச் சுற்றில் அவர் லத்வியன் நாட்டைச் சேர்ந்த எர்னேஸ்ட் குல்பிஸுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.
இதில், வெற்றிபெறும் பட்சத்தில் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் ஆஸ்திரேலிய ஓபன் பிரதான சுற்றுக்கு முன்னேறுவார் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: 6 டாலர் தான் இருந்தது; கோலி இல்லை என்றால்? மனம் திறக்கும் சுமித் நகல்