கோவிட்-19 பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் பலவற்றில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்தாண்டு நடைபெறவிருந்த பிரஞ்ச் ஓபன், விம்பிள்டன் உள்ளிட்ட முக்கிய டென்னிஸ் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து உலகின் நட்சத்திர டென்னிஸ் வீரர்களில் ஒருவரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், ஊரடங்கின் காரணமாக தனது நேரத்தை குடும்பத்தினரிடம் செலவிட்டு வருகிறார். இந்நிலையில் இவர், சமீபத்தில் தனியார் விளையாட்டு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், வருடத்திற்கு ஒருமுறை இது போன்று ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால், உலகின் இயற்கை வளம் பாதுக்காக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய சிட்சிபாஸ், ‘தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் மாற்றமடைந்துள்ளது. ஏனெனில் நாம் அனைவரும் மற்றவர்களை சந்திக்காமல் இருப்பது மிகவும் வித்தியாசமான மனநிலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாம் நம்முடைய குடும்பத்துடன் நேரத்தை செலவிட சிறந்த வழியாக அமைந்துள்ளது.
மேலும் என்னை பொறுத்தவரையில் வருடத்தில் ஒரு முறையாவது இப்படிப்பட்ட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த வேண்டும் என நினைக்கிறேன். இது நம் இயற்கைக்கும், நம் உலகிற்கும் மிகவும் நன்மை பயக்கும் ஒன்றாகும். ஏனெனில் தற்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக நமது சுற்றுச்சூழல் மிகப்பெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாக நான் நினைக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஐசிசி தலைவராகிறாரா சவுரவ் கங்குலி?