பதினாறு வயது இளம் டென்னிஸ் வீராங்கனையான கோகோ காஃப், இதுதொடர்பாக ட்விட்டரில் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது," 50 ஆண்டுகளுக்கு முன்பு எனது பாட்டி எதற்காக போராட்டம் செய்தாரோ அதே விஷயத்துக்காக, தற்போது நானும் போராட்டத்தில் ஈடுபடுவது வருத்தமாக உள்ளது. ஆனாலும் மாற்றம் நிகழும் வரை நானும் இதை தொடருவேன்.
பிரச்னை எதுவாக இருந்தாலும் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்த வேண்டும். இன வேற்றுமை பற்றி நண்பர்களுடன் பல வாரங்கள் கடினமான உரையாடல்களை நிகழ்த்தியுள்ளேன். ஆனால் இவற்றிலிருந்து விடுபடுவதற்கு கருப்பினத்தவரல்லாத எனது நண்பர்களுக்கு சரியான கற்பித்தலை தருவதற்கு முயற்சி செய்து வருகிறேன்.
ஜார்ஜ் ஃப்ளாய்ட் போல் ட்ரைவோன் மார்ட்டின், எரிக் கார்னர், பிரோனா டெய்லர் என, பல ஆப்பரிக்க-அமெரிக்கர்கள் முன்னதாக கொல்லப்பட்டிருந்தாலும், எதிர்கால சந்ததியினருக்காக போராட வேண்டியுள்ளது.
எதிர்காலத்தில் எனது சகோதரர்கள், குழந்தைகள், பேரக்குழந்தைகள் ஆகியோரை மனதில் வைத்து குரல் கொடுக்க வேண்டும். நல்லவர்களின் அமைதியானது, கொடுஞ்செயல் புரியும் தவறானவர்களை விட மிகவும் மோசனமானது என்று கருப்பினத்தவருக்காக குரல் கொடுத்த மார்டின் லூதர் கிங் கூறியுள்ளார்.
எனவே வாய்பேசாமல் அமைதியாக இருப்பது அடக்குமுறைகளுக்கு வழிவிட தயாராக இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது. உங்களுக்கு கருப்பினத்தவர்களை பிடிக்கிறதென்றால், நீங்கள் அவர்களுடன் சேர்ந்து போராடி மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்று கூறியுள்ளார்.
கருப்பினத்தனவரும், ஆப்ரிக்க-அமெரிக்கருமான ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவர் காவலர் ஒருவரின் பிடியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் உலகை உலுக்கிவருகிறது. அமெரிக்காவில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு எதிராக தொடர்ந்து நடைபெற்றுவரும் ஒடுக்குமுறையைக் கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதைத்தொடர்ந்து இளம் நட்சத்திரமாக ஜொலித்து வரும் டென்னிஸ் வீரங்கனையும் கருப்பினத்தினவருக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு தனது குரலை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.