ஜப்பானின் இளம் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா. இவர் கடந்தாண்டு நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், அமெரிக்க நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றிய ஜப்பான் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரிலும் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தினார் ஒசாகா.
முன்னதாக உலக டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் மகளிர் ஒற்யைர் பிரிவில் முதலிடம் பிடித்திருந்த ஒசாகா தற்போது நான்காம் இடத்தில் உள்ளார். இந்நிலையில் இவர் அடுத்தாண்டு ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறார். ஆனால் இந்த ஒலிம்பிக் போட்டிகளில் ஜப்பான் சார்பாக ஒசாகா பங்கேற்க வேண்டுமெனில் அவர் ஒரு குடியுரிமை மட்டுமே பெற்றிருக்க வேண்டும்.
ஜப்பானில் பிறந்த ஒசாகாவுக்கு ஜப்பான் குடியுரிமை உள்ளது. அதே சமயத்தில் கரீபியன் நாடுகளில் ஒன்றான ஹைதியைச் சேர்ந்த தந்தை - ஜப்பானிய தாய்க்கு பிறந்த நவோமி ஒசாகா, நான்கு வயதிலிருந்தே அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வளர்ந்தார். அதனால் அவருக்கு அமெரிக்க குடியுரிமையும் கிடைத்தது. பின்னாளில் தனது தாய் நாடான ஜப்பானுக்காக பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுவந்தார்.
இந்தச் சூழலில் அடுத்தவாரம் அவர் தனது 22ஆவது வயதில் அடி எடுத்துவைக்கிறார் ஒசாகா. ஜப்பானிய விதிப்படி 22 வயது நிரம்பும் நபர் ஏதேனும் ஒரு குடியுரிமையை மட்டுமே பெற்றிருக்க வேண்டும். இதன் காரணமாக தற்போது ஒசாகா தனது அமெரிக்க குடியுரிமையை விலக்கிக் கொள்ள முடிவு செய்துள்ளார். மேலும் அவர் ஜப்பானுக்காக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது தனக்கு புதிய உணர்வை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.