மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் ஃபிரான்ஸ் நாட்டின் மொனாக்கோ நகரில் நடைபெற்றுவருகிறது. தற்போது இந்தத் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டியில் ஸ்பெயின் நட்சத்திர வீரர் நடாலை எதிர்த்து இத்தாலியின் ஃபேபியோ போக்னினி ஆடினார்.
இதன் முதல் செட் ஆட்டத்தில் யாரும் எதிர்பாராத வகையில் அபாரமாக ஆடிய ஃபேபியோ 6-4 எனக் கைப்பற்ற ரசிகர்களிடையே அதிர்ச்சியும் பரபரப்பும் ஒருசேர தொற்றிக்கொண்டது.
ஏனென்றால் களிமண் ஆடுகளத்தின் மன்னனாக கருதப்படும் நடாலை எதிர்த்து ஆடிய போட்டியில் முதல் செட்டைக் கைப்பற்றுவது எளிதான காரியம் அல்ல.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்தில் அதீத நம்பிக்கையுடன் அதிரடி காட்டிய ஃபேபியோ, நடாலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தினார். ஃபேபியோவின் அதிரடிக்கு ஈடுகொடுக்க முடியாத நடால், ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் இரண்டாவது செட்டையும் 6-2 என இழந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றதையடுத்து ஃபேபியோ இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இறுதிப் போட்டியில் இத்தாலி வீரர் செர்பியாவின் லஜோவிச் எதிர்த்து ஆடவுள்ளார்.