உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் நட்சத்திரமாக வலம் வருபவர் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச். இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், தனது கனவு குறித்து கூறியுள்ளார்.
அந்தப் பேட்டியில் பேசிய ஜோகோவிச், ”டென்னிஸ் விளையாட்டில் நான் செய்யவேண்டிய காரியங்கள் நிறைய இருக்கிறது என நினைக்கிறேன். அதிலும், குறிப்பாக உலகில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைப் பெற்றவன் என்பதும், அதிக வாரங்கள் டென்னிஸ் விளையாட்டின் நம்பர் ஒன் வீரராக வலம்வருவதும் மிக முக்கியமானவை. ஆனால் எனது கனவை நனவாக்க நான் இன்னும் உழைக்க வேண்டும். அதற்கான முயற்சியில்தான், நான் ஈடுபட்டு வருகிறேன். என்று எனது கனவு நிறைவேறுகிறதோ அன்று நான் இவ்விளையாட்டிலிருந்து எனது ஓய்வை அறிவிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
32 வயதாகும் ஜோகோவிச் இதுவரை சர்வதேச டென்னிஸில் 17 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களைப் பெற்று, அதிக கிராண்ட்ஸ்லாம் பெற்றவர்கள் பட்டியலில் மூன்றாமிடத்தில் உள்ளார். இப்பட்டியலின் முதலிடத்தை சுவிட்சர்லாந்தின் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரர் தக்கவைத்துள்ளார். அவர் இதுவரை 20 சர்வதேச டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களைப் பெற்றுள்ளார். அவருக்கு அடுத்ததாக ரஃபேல் நடால் 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் இரண்டாமிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'இந்தியாவுக்கு எதிரான தொடரை நிறுத்த வேண்டாம்' - இலங்கை கிரிக்கெட் வரியம் வேண்டுகோள்!